புதன், 12 டிசம்பர், 2012

ரவி சங்கர்

வாழ்க அவர் இசை!

புதன், 22 ஆகஸ்ட், 2012

கர்ணன்

நேற்று (21/08/2012), லோட்டஸ் பிஜே ஸ்தேட் திரையரங்கில் கர்ணன் பார்த்தேன். மலை 5.55 காட்சிக்கு அரங்கம் பாதி நிறைந்திருந்த்து. பழைய பிரதியை மீண்டும் கணினி மூலம் புதுபித்த மூன்று மணி நேர படம். இதை பார்க்க வந்த மக்கள் கூட்டத்தில் பெரும்பாலும் இளையோர்கள். 48 வருடங்கள் கடந்தும் இந்த படத்திற்கு இன்றும் மக்கள் கொடுக்கும் ஆதரவை நினைத்து மகிழ்ச்சி கொண்டேன்.

மகாபாரதத்தில் கர்ணனே கர்ம யோகியாக கீதை சாட்சிப்படுத்துகிறது. இந்த படம், அந்த கர்ம யோகியை நம் முன் உயிர்க்கொடுத்து காட்சிப்படுத்துகிறது. கர்ணனின் பிறப்பிலிருந்து மரணம் வரை அவனைப் பற்றி எவ்வளது துள்ளியமாக காட்ட முடியுமோ அவ்வளவு சிரத்தையுடன் காட்டியுள்ளார் இந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான பி. ஆர். பந்தலு.


நீண்ட இடைவெளிக்கு பின் பார்த்த முழு நீள செந்தம்மிழ் திரைப்படம் கர்ணம். மகிழ்ச்சி.


Karnan (film)
கர்ணன் (மகாபாரதம்)

திங்கள், 16 ஜூலை, 2012

சங்க கால உணவு திருநாள் 2012

நேற்று (15/07/2012), ஒரு உணவு திருநாளுக்குச் சென்றிருந்தேன். சங்க கால உணவு திருநாள் 2012, ரோயல் சிலாங்கூர் கிளபில் (Royal Selangor Club, Dataran Merdeka.) இனிதே கொண்டாடப்பட்டது. பிரபல தென்நிந்திய சமயல்காரர் தாமு ஐயா அவர்களின் தலைமையில் சுவையான 30-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

சங்க கால உணவு திருநாள் 2012


வரவேற்பு பானமாக ஒரு மூலிகை 'பானகம்' தந்து என்னை அமரவைத்தார் நண்பர் அருண்குமார் சேதுராமன். நிகழ்ச்சி ஆரம்பமானதும் பட்டியல்படி உணவுகள் வந்த வண்ணமே இருந்து கொண்டிருந்தன. அனைவருக்கும் அளவாகவே ஒவ்வொரு உணவும் பரிமாறப்பட்டது சுவைப்பதற்கு வசதியாகவும் இலகுவாகவும் இருந்தது.

பரிமாறப்பட்ட பல உணவு வகைகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் நேற்றுதான் அவைகளை சுவைக்கும் வாய்ப்பு கிடைத்தது. தேனும் தினைமாவும், காஞ்சிப்புர இட்லி, சுயம், உக்கரை போன்றவை இதில் அடங்கும். அறுசுவைகளில் கசப்பை தவிர மற்ற ஐந்துக்கும் குறையில்லை.

தேனும் தினைமாவையும் கலந்து சாப்பிடும் பழக்கம் மலைவாழ் மக்களிடையே விருப்பமாக காணப்படும். மிக கடுமையான வறட்சியைக் கூட தாங்கி பல்வகை மண்ணிலும் வளரக்கூடிய ஆற்றல் மிக்க சத்துணவு தினை. முருகப்பெருமானுக்கு இன்றும் முக்கிய உணவுப் படையலாக தேனும் தினைமாவுமே வைத்து வழிப்பாடு நடைப்பெறுகிறது. இந்த உணவே அன்று கிழவனாக வந்த முருகனுக்கு வள்ளி ஊட்டிய விருந்து.

நல்ல நிகழ்ச்சி. நானறிந்து மலேசியாவில் இம்மாதிரி இதுவே முதல் முயற்சி. இந்நிகழ்வை சிறப்பாக தமிழில் வழிநடத்தி தொகுத்து கொடுத்த சுஷ்மித்தா அவர்களுக்கு வாழ்த்துகள். பரிமாறப்பட்ட பல உணவுகளின் சமயல் குறிப்பை அவர் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டமை சிறப்பு. ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக் குழுவினருக்கு நன்றி. அடுத்த திருவிழாவிற்கு காத்திருக்கிறேன்…

வெள்ளி, 16 மார்ச், 2012

பிரம்மம்

"இந்து மதத்தின் உருவ வழிபாடு அன்றைய மேலோட்டமான ஐரோப்பியர் நினைத்தது போல பொருள்களை வணங்கும் அறியாமை அல்ல. இந்து மதத்தின் உருவ வழிபாடு நுட்பமான ஒரு முரணியக்கம் கொண்டது. அதன் தத்துவார்த்தமான சாராம்சம் என்பது உருவமற்ற, அடையாளமற்ற, எல்லையற்ற, மானுடப் புரிதலுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட இறை உருவகம்தான். அதை நாம் பிரம்மம் என்றோம். அது கூட ஒரு சொல்தான். இறை அந்த சொல்லுக்கும் அப்பாற்பட்டது."

இந்த அருமையான வரிகள் காந்தி இன்று (Gandhi Today - http://www.gandhitoday.in/2012/03/1.html) தளத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் 'காந்தியின் சனாதனத்தில்' இடம்பெற்றவை.

வியாழன், 24 பிப்ரவரி, 2011

மலேசியா வாசுதேவன் - அஞ்சலி

பிரபல பாடகரும் நடிகருமான கலைமாமணி மலேசியா வாசுதேவன் அவர்கள் 20/02/2011, ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணிக்கு காலமானார். அவர் 8000-திற்கும் மேற்பட்ட பாட்டுகளைப் பாடியுள்ளார். அதில் அடிக்கடி நினைவில் வருவது தர்ம யுத்தம் படத்தில் இடம்பெற்ற “ஒரு தங்கரதத்தில் பொன் மஞ்சள் நிலவு”.


மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு அஞ்சலி.



http://en.wikipedia.org/wiki/Malaysia_Vasudevan

வியாழன், 30 டிசம்பர், 2010

மலேசியா வெற்றி!

14 வருடங்களுக்குப் பிறகு, நேற்று (29/12/2010), நம் மலேசிய அணி ஆசியன் காற்பந்து சம்மேளனம் சுசுக்கி கிண்ணம் 2010 [Asean Football Federation (AFF) Suzuki Cup 2010] இரண்டாம் கட்ட இறுதி சுற்றில் 4-2 புள்ளியில் இந்தோநேசிய அணியை இந்தோநேசியாவில் கெலோரா புங் கர்ணோ அரங்கத்தில் (Gelora Bung Karno Stadium, Indonesia) வீழ்த்தியது.



கடந்த 26/12/2010, முதல் கட்ட இறுதி சுற்றில் மலேசிய அணி 3-0 ‘கோல்’ (Gol) என இந்தோநேசிய அணியை மலேசியாவில் புகிட் ஜாலில் தேசிய அரங்கத்தில் தோற்கடித்தது.

இதற்கு முன், தொடர்ந்து 7 முறையில் மலேசியா ஒரே ஒரு முறை மட்டுமே 1996-ல் இறுதி சுற்றுக்கு தேர்வானது. அப்பொழுது இந்த கிண்ணத்தை டைகர் கிண்ணம் (Tiger Cup) என்பர். இருப்பினும், இந்த இறுதியாட்டம் மலேசியாவிற்கு சாதகமாக அமையவில்லை. 0-1 ‘கோல்’ என தாய்லாந்திடம் (Thailand) தோல்வியுற்றது. அப்போதிலிருந்து, தென்கிழக்காசியாவின் காற்பந்தாட்ட மன்னனாக வரவேண்டும் என மலேசியாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறாமலே இருந்து வந்திருந்தது.


இந்த கனவை நிறைவேற்றிய கி. ராஜகோபால் அவர்களின் பயிற்சியிலும் வழிகாட்டுதலிலும் தங்கள் திறனை மெருகேற்றிக் கொண்ட மலேசிய அணியின் சாதனைக்கு வாழ்த்துகள்!

இந்த வெற்றியை கொண்டாடுவதற்கு நம் பிரதமர் நஜிப் அவர்கள் நாளை 31/12/2010 பொது விடுமுறையாக அறிவித்திருக்கிறார்.

MALAYSIA BOLEH!!! (மலேசியாவால் முடியும்)



நன்றி:
தி மலேசியன் இன்சைடர் (The Malaysian Insider)
http://www.themalaysianinsider.com/bahasa/article/piala-suzuki-penantian-14-tahun-malaysia-berakhir/

வியாழன், 2 டிசம்பர், 2010

"2012" - தமிழ் மேடை நாடகம்

நேற்று (1/12/2010) தாமான் புடாயாவில் நடைபெற்ற எஸ். டி. பாலாவின் “2012” தமிழ் மேடை நாடகத்திற்கு என் நண்பருடன் சென்றிருந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இரசித்த நிகழ்ச்சி இது.


இருபது ரிங்கிட் நுழைவு சீட்டில் உள்ளே புகுந்து அமர்ந்தோம். நேற்று முதல் காட்சிக்கு எங்களையும் சேர்த்து சுமார் 35 இரசிகர்கள் இருந்திருப்பார்கள். சரியாக 8.31-க்கு நாடகம் தொடங்கி 10.30-க்கு முடிவுற்றது.


இதுவரை எஸ். டி. பாலாவின் நாடகங்களில் அவர் திரைக்கு பின்னால் செயலாற்றிதான் நான் பார்த்திருக்கின்றேன். ஆனால், நேற்றுதான் நான் அவரை முதல் முதலாக திரைக்கு முன்; மேடையில் பார்க்க முடிந்தது. ஆம், அவர்தான் அறிவழகன்.

இந்த நூற்றாண்டில் நடக்கும் சமூதாய ஒழுக்கியல் மீறல்களை சகித்துக் கொள்ள முடியாத அறிவழகன் அவைகளை அனுசரித்துக்கொள்ளவும் தயாராக இல்லை. இந்த மன அழுத்தத்தில் தள்ளப்பட்டு அவன் அபாரமாக எதிர்வினையாற்றுகிறான்; அதன் பின் விளைவுகளையும் எதிர்க்கொள்கிறான்.

அப்படி என்ன மன உளைச்சல் அறிவழகனுக்கு? அவன் செய்தது சரியா?
இந்த கேள்விகளுக்கு விடை நாகர்த்தும் உச்சமே “2012”.

இந்த நாடகத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் திறம்பட கையாளப்பட்டிருக்கின்றன. அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துகள்!

எஸ். டி. பாலாவின் திறைமையான படைப்புகளில் இதுவும் ஒன்றாக நான் கருதுகிறேன்.

வியாழன், 18 நவம்பர், 2010

உயிர்சித்திரங்கள்

இன்று (18/11/2010) காலை மணி 1.30 ஆகியும் தூக்கம் வரவில்லை. விடிந்தால் வேலை என்ற வற்புறுத்தலில் தூங்கச் சென்றேன். தூங்க முயற்சித்தேன்... கண்களை மூடினால் மீனாட்சி, பொன்னம்மாள் மற்றும் வீரா ஆகியோர் கூட்டணி அமைத்து என் தூக்கத்தை கலைத்துக் கொண்டிருந்தார்கள். பிறகு எங்கே தூங்குவது, இருந்தும் என் முயற்சியைத் தொடர்ந்தேன்.

பொழுது விடிந்தது, அதே மூவர்களால் எழுப்பப்பட்டேன். எழுந்தேன்; காலை கடன்களை முடித்தேன்; அலுவலகம் சேர்ந்தேன். இப்பொழுது மதியம் மணி 1. அவர்கள் இன்னும் என்னை துரத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள்... யார் இவர்கள்? ஏன்?

மீனாட்சியும் பொன்னம்மாளும் ஒலி, ஒளியில் காட்சியமைக்கப்படாத இரு சித்திரங்கள். இவர்கள் இருவருமே JK-வின் (ஜெயகாந்தன்) எழுத்துகளினால் செதுக்கப்பட்ட ‘தர்க்கம்’ சிறுகதையை உயிரூட்டும் பெரும்பாத்திரங்கள். இந்த கதையை நேற்றைய (17/11/2010) காலை பசியாற்றுதலுக்குப் பிறகு வாசிக்க நேர்ந்தது.

சில சமயங்களில் கதைகளை வாசிக்கும் பொழுது மனதில் அதை காட்சி படுத்திக்கொள்வது புரிதலுக்கு வசதியாக இருக்கும். அப்படிதான் தர்க்கமும் காட்சியமைக்கப்பட்டது. மீனாட்சியும் பொன்னம்மாளும் செய்துகொள்ளும் தர்கத்தின் எதிர்வினைதான் கதையின் முடிவு. அதை மனதில் முழுவதுமாய் காட்சிப்படுத்த கடினமாகத்தான் இருந்தது எனினும் அக்காட்சி ஒரு வகையில் சிறப்பாகவே அமைந்தது, “ரகுபதி ராகவ ராஜாராம்... பதிதபாவன சீதாராம்...” பாடல் பின்னணியில் ஒலித்துக் கொண்டு மேலும் வலுச்சேர்த்தது.

சில நிமிடங்களுக்குள் தர்க்கம் வாசித்து முடித்தாயிற்று. அடுத்தபடியாக JK-வின் ‘துறவு’-க்குள் புகுந்தேன். துறவை தொடர முடியவில்லை. தர்க்கமே என்னை முழுமையாய் ஆட்கொண்டிருந்தது. அதன் தாக்கத்திருலிருந்து விடுப்பட முடியவில்லை. பல முறை முயற்சித்தும் இரண்டு பக்கங்களைக்கூட கடக்கவில்லை. முடிவில் துறவை துறந்தேன்.

அன்று முழுவதும் வேறு எதையும் கூட படிக்க முடியவில்லை...

நேரம் பிற்பகல் மணி 3, அஸ்ட்ரோ த
ங்கத்திரையில் ராவணன் படம் ஒளியேறியது. வீரா மணிரத்தினத்தின் ராவணன். படத்தின் இறுதிக் கட்டத்தில் அவன் இறக்கும் காட்சி மட்டும் என்னை நெகிழ வைத்தது. அதற்கு மூல காரணம் பின்னனியில் ஒலிக்கும் ரஹ்மானின் பின்னணி பாடல்.


பாடலுடன் கூடிய ராவணனின் இறுதிக்காட்சி மட்டும் காரணமின்றி என் மனதை மீண்டும் மீண்டும் வருடிச் செல்கிறது. சுமார் 5.10-க்கு படம் முடிவுற்றது. ஆனால், அதன் தாக்கம் மட்டும் என்னை பின்தொடர்கின்றது.



இதே போன்ற மன நிலையை பல முறைகள் எதிர்கொண்டிருந்தாலும் குறிப்பாக இரு வாரங்களுக்கு முன் நாஞ்சில் நாடனின் 'இடலாக்குடி ராசா' என்னை பெருமளவு பாதித்திருந்தது. இந்த ஒருவனின் மனதாக்கத்திலிருந்து முழுமையாக விடுப்படுவதற்குள் மீனாட்சி, பொன்னம்மாள் மற்றும் வீராவின் கூட்டணியா...!?

ஏனோ இந்த கதாபத்திரங்கள் அனைத்தும் கதை பலத்துக்காக புனையப்பட்டிருந்தாலும் வாசிப்பவர்ளின் மனதில் அவர்களுக்குத் தெரியாமலேயே அழுத்தமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இவ்வகையான புனைவுகள் பலரது தூக்கத்தையும் அமைதியையும் குலைத்திருந்தாலும் முடிவில் மன தெளிவையே ஏற்படுத்துகின்றன.

இந்த உலகத்தில் பல மூலை முடுக்குகளில் இந்த காதாபத்திரங்கள் அனைத்தும் சிதறி உயிர்சித்திரங்களாக வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன இன்று மனிதர்களாக.

வெள்ளி, 15 அக்டோபர், 2010

டெல்லி 2010 (DELHI 2010)


19-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, டெல்லி 2010 (DELHI 2010), 3/10/2010-ஆம் நாள் பிரமாண்டமாக புதுடெல்லியில் தொடங்கி அதே பிரமாண்டத்துடனும் கோலாகலமான கலை நிகழ்ச்சியுடனும் நேற்று (14/10/2010) நிறைவு பெற்றது.

பதக்க பட்டியலில் இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களை பெற்று, 2-வது இடத்தை பிடித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

பல இன்னல்களை கடந்து, பன்னிரெண்டு நாட்கள் உற்சவத்தை வெற்றிகரமாக RM1853 கோடி (US$6 billion) விளையாட்டு போட்டியை இந்தியா நடத்தி சரித்திரம் படைத்தது.

வாழ்த்துகள் இந்தியா!



மேலும் தெரிந்துக்கொள்ள:

1. http://www.cwgdelhi2010.org/
2. http://en.wikipedia.org/wiki/2010_Commonwealth_Games
3. http://www.themalaysianinsider.com/sports/article/delhi-overcomes-challenges-to-close-on-a-high/
4. http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=18001&id1=12
5. http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=14&Value2=7314&value3=I
6. http://indiatoday.intoday.in/site/specials/cwg/index.jsp
7. http://www.bbc.co.uk/blogs/matthewpinsent/2010/10/what_will_commonwealth_legacy.html

இன்னல்களை பற்றி தெரிந்துக்கொள்ள:
1. http://www.bbc.co.uk/news/world-south-asia-11525504

புதன், 4 மார்ச், 2009

இருவர் 2 – தமிழ் மேடை நாடகம்


பல மாதங்களாக காத்திருந்த இந்த தமிழ் மேடை நாடகத்தை காண முதல் காட்சிக்கு பசியையும் பொருட்படுத்தாமல் அலுவல் முடிந்ததும் என் நண்பர்களுடன் நேற்றிரவு (03/03/2009) இஸ்தானா புடாயாவிற்கு (Istana Budaya) சிட்டுக் குருவியாய் பறந்தேன். இரவு 8.31-க்கு தொடங்கிய நாடகத்தை, கடுமையான வாகன நெரிசலின் காரணமாக சற்று தாமதமாக ஏறக்குறைய இரவு 8.45-லிருந்துதான் பார்க்க நேர்ந்தது. முப்பது வெள்ளி நுழைச்சீட்டில் முப்புற இருக்கையில் தெளிவாக காட்சிகளைக் காணும்படி அமைந்த அமர்வு மகிழ்ச்சி.


2004-ஆம் ஆண்டு அறங்கேறிய இருவர், மலேசியாவிலும் தமிழகத்திலும் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட வெற்றிப் படைப்பு. மலேசிய நாட்டில் முதல் முறையாக இருவர்களை மட்டுமே தாங்கிய மேடை நாடகம் என்று மலேசிய சாதனை புத்தகத்தில் (Malaysia Book of Records) இடம்பெற்று சாதனை படைத்தது இந்த ‘இருவர்’.

இந்த சாதனைகளுக்கு ஆதாரமான இந்த நூற்றாண்டின் மலேசிய தமிழர்களுக்கு கிடைத்த ஒரு புதையல் இயக்குனர் எஸ். டி. பாலா; அவர்களின் மற்றொரு சிறந்த படைப்புதான் இந்த ‘இருவர் 2’ தமிழ் மேடை நாடகம். இது 2009-ஆம் ஆண்டின் இவரின் முதல் படைப்பாக மலர்ந்தாலும், தமிழ் மேடை நாடகங்களில் இது இவரின் 20-வது படைப்பு.


மலேசிய திருநாட்டு தமிழ் மேடை நாடகத்தின் அழிவை உயிர்பித்த இந்த சாதாரண மனிதனின் சாதனை பல. எல்லாம் மேடை நாடகத்தினாலேயே தேடி வந்தது. தமிழகத்தையே பேச வைத்த இவரின் இருவர், இயக்குனர் சிகரம் பாலசந்தரையே மனதார பாராட்ட வைத்ததுதான் குறிப்பிடத்தக்கது.

ஒரு குடும்பத் தலைவனுக்கும் குடும்பத் தலைவிக்கும் ஏற்படும் கருத்துவேறுபாட்டின் விளைவுகளை மையமாக வைத்து நகர்த்திய கதை, இருவர் 2. சுமார் இரண்டு மணி நேரங்கள் தோய்வில்லாமல் நகர்ந்த இந்த நாடகம் என் பசியையும் மறக்கவைத்தது. மிகவும் சிறப்பாக இரசிக்கும்படியாக இந்த நாடகம் அமைந்தற்கு கூடியிருந்த நாற்பது இரசிகர்களின் கைத்தட்டலே சாட்சி. அதைவிட, இரசிகர்களாகிய நாங்கள் அனைவரும் இறுதிவரை கவனச்சிதறல் இல்லாமல் அரங்கிலேயே கட்டுண்டு கிடந்தது மற்றுமொரு சாட்சி.

இந்த தரமான படைப்புக்கு எஸ். டி. பாலாவிற்கும் அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி; வாழ்த்துக்கள்! குறிப்பாக இந்த மேடைநாடகத்தின் கதாபாத்திரங்களுக்கு உயிர்க்கொடுத்து வாழ்ந்து காட்டிய, வாழ்ந்துக் கொண்டிருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!


http://www.nst.com.my/Current_News/NST/Monday/Features/20090301191957/Article/indexF_html

http://kanaigal.blogspot.com/2009/02/11_19.html

திங்கள், 23 பிப்ரவரி, 2009

வாழ்த்துக்கள் - ஏ.ஆர். ரஹ்மான்

ஸ்லம்டாக் மில்லியனர் (Slumdog Millionaire) படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன; சிறந்த இசைக்காகவும் (Original Score), சிறந்த பாடலுக்காகவும் (Original Song) விருது அளிக்கப்பட்டுள்ளன. வாழ்த்துக்கள்!


படம்-தினமலர்: நன்றி.

வியாழன், 12 பிப்ரவரி, 2009

வெற்றி வேல் முருகா!

தைப்பூசம் – சுங்கைப்பட்டாணி

8/2/2009, காலை 11 மணிக்கு சுங்கைப்பட்டாணியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு குடும்பத்துடன் சென்றேன். வாகனத்தை ஜாலான் செகெராட் (Jalan Sekerat) காந்தி நினைவு மண்டப வளாகத்தில் நிறுத்தி விட்டு, ஏறக்குறைய 500 மீட்டர் கோயிலை நோக்கி நடந்தோம். நடக்கும் வழியெல்லாம் இடதும் வலதும் தண்ணீர் பந்தல்கள். கோயிலை நெருங்க நெருங்க கூட்ட நெரிசல் அதிகரித்தது. அப்பா அர்ச்சனை சீட்டை வாங்கி வந்ததும், நாங்கள் எல்லோரும் கோயிலின் இராஜகோபுரத்தின் நுழைவாயில் வழியே உள்ளே சென்று சுப்பிரமணியரை தரிசித்தோம்.


கோயில் கற்பகிரகத்தில் மூலவருக்கு பக்தர்களின் நேர்த்திகடனான பாலாபிஷேகம் மிகவும் சிறப்பாகவே நடந்தேறிய வண்ணம் இருந்தது. பக்தர்கள் வரிசை வரிசையாக பால்குடம் ஏந்தி வந்துக்கொண்டிருந்தனர். மறுபுறம் உற்சவருக்கு அர்சனைகள் குவிந்த வண்ணம் இருந்தது. இந்த இடம் குறுகலாக இருந்தப்படியால் மக்கள் கூட்டத்தால் நெரிசலாக்கப்பட்டது. இருப்பினும் நாங்கள் கூட்டத்தோடு கூட்டமாக குடும்பத்தோடு நின்று ஒருவகையில் அர்சனை பிரசாதத்தை பெற்றுக்கொண்டோம்.


பிறகு, கோயிலின் ஒரு ஓரமாக நாங்கள் நின்று கொண்டு வெளியே சுற்றிவரும் காவடிகளை இரசித்துக் கொண்டிருந்தோம். முன்பைபோல இப்பொழுது மயில் இறகால் அலங்கரிக்கப்பட்ட காவடிகள் மிக குறைவு. சிறுவயதில் இந்த காவடிகளை பார்ப்பதற்காகவே தைப்பூசத் திருவிழாவின் வரவுக்காக காத்திருந்ததை நினைத்துக்கொண்டேன். முன்பைவிட இப்பொழுது காவடிகளும் மக்கள் கூட்டமும் அதிகரித்தே காணப்படுகிறது. ஏறக்குறைய 250,000 பேர் ஒன்று கூடும் ஒரு நிகழ்ச்சியாக இந்த சுங்கைப்பட்டாணி தைப்பூசம் விளங்குகிறது.



கடவுள் படத்தோடு அலங்கரிக்கப்பட்ட பல அழகிய காவடிகளை இன்னும் பக்தர்கள் சுங்கைப்பாட்டாணி முருகனுக்கு எடுக்கிறார்கள். பினாங்கு போல இங்கிலாந்து காற்பந்து குழுக்கான காவடிகளையெல்லாம் சுங்கைப்பட்டாணி பக்தர்கள் எடுக்காமலிருந்ததற்கு நன்றி.


இன்னொரு சிறப்பு அங்கம், காவடிகளுக்கு இசையமைப்பு. முன்பு அதிகமாக முழங்கப்பட்ட தண்டோராக்கள் இந்த வருட தைப்பூசத்திற்கு குறைந்தே காணப்பட்டது. அதற்கு பதிலாக அழகான சீருடை அணிவகுப்பில் உறுமி மேளங்கள் இசைக்கப்பட்டன; பாராட்டுகள். இன்னும் சில வருடங்களில் இந்த உறுமி மேளம் மட்டுமே தைப்பூசத்திருவிழாவிற்கு காவடிகளுக்காக இசைக்கப்படும் ஒரு முக்கிய இசைக்கருவியாக அமைந்துவிடும் என நான் நம்பிக்கைக் கொள்கிறேன்; வாழ்த்துக்கள்!








மதியம் மணி 12.30, வெயில் அதிகமாக இருந்ததால் என் குடும்பத்தாரை கோயிலிலேயே இருக்கச் சொல்லி விட்டு நான் மட்டும் கோயில் நிர்வாகத்தால் கோயில் திருமண மண்டபத்தில் வழங்கப்படும் அன்னதானத்தை பெறச் சென்றேன். நீண்ட வருசையில் நின்று இரு அன்ன பொட்டலங்களை வாங்கிக்கொண்டு மீண்டும் கோயிலின் அருகே வந்து குடும்பத்தை அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன். செல்லும் வழியில் அனைத்து தண்ணீர் பந்தல்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த காட்சிகளை பார்த்து மிகவும் மகிழ்ச்சியுற்றேன். முருக தரிசனத்தின் அகமகிழ்வோடு அனைவரும் வீடு வந்தடைந்தோம்.

திங்கள், 2 பிப்ரவரி, 2009

அஞ்சலி - நாகேஷ்


31 January, 2009 – தமிழ்த்திரையுலகின் பழம்பெரும் மன்னன் நாகேஷ் இயற்கை எய்தினார். அவரின் பிரிவு மனதை உலுக்கினாலும் அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் மனத்திரையில் ஓடிக்கொண்டு இருப்பது, கலங்கிய மனதை ஆதரிக்கிறது. என்னுள் அவர் வாழ்வதற்கு இதுவே சாட்சி!

ஈடு இணையற்ற கலைஞனே நாகேஷ், உமக்கு என் அஞ்சலி.


புதன், 14 ஜனவரி, 2009

பொங்கல் வாழ்த்துக்கள்!

பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!


இந்த இன்ப கூச்சல் தைப்பொங்கலில் மட்டுமல்ல, சிறு வயதில் ஒவ்வொரு முறையும் மதிய உணவுக்கு அம்மா சோற்றை பொங்க வைப்பதை பார்த்த போதெல்லாம் நான் துதித்தது இந்த தாரக மந்திரத்தையே.

அன்று எனக்கு தினம் தினம் பொங்கல் திருவிழா. இன்று அதை நினைக்கும் பொழுது, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வெளியீட்ட சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் ‘வாழ்வே தவம்’ என்ற புத்தகத்திலிருந்து ‘இன்று நாம் புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற கட்டுரை நினைவிற்கு வருகிறது.

அந்த கட்டுரையிலிருந்து சில வரிகள் பின்வருமாறு:

“...நாட்கள் எப்படித் தன்னை தினம் தினம் புதுப்பித்துக் கொள்கின்றனவோ, வருடம் எப்படி தன்னை வருடா வருடம் பிறப்பித்துக்கொள்கின்றதோ, நாமும் தினம் தினம் இன்று நாம் புதிதாய்ப் பிறந்தோம் என்ற பாரதியார் உற்சாகத்தில் நம்மை நாம் புதுபித்துக்கொண்டால் இந்த வாழ்க்கை தினம் தினம் திருவிழாதான்.”

அன்று என் பாலிய பருவத்தில் அர்தமின்றி தினம் தினம் கொண்டாடிய திருவிழாவின் மகத்துவத்தை இன்று இளைய பருவத்தில் அர்த்தத்துடன் உணர்ந்துக் கொண்டேன்.

பொங்கல் வாழ்த்துக்கள்!

வெள்ளி, 9 ஜனவரி, 2009

ஜனவரி, வருடத்தின் ஆரம்பமா இறுதியா?

இந்த கேள்விகளுக்கு மார்க் சில்வர் (Marc Silver) பின்வரும் தன் வலைபதிவில் பதிலளித்திருக்கின்றார். http://ngm.typepad.com/pop_omnivore/2009/01/how-january-wen.html.

ஜனவரி (January), ஜானுஸ் (Janus) என்ற இருதலைகள் கொண்ட ரோமன் கடவுளின் பெயரிலிருந்து வந்ததாகும். ஆரம்பமும் இறுதியையும் பிரதிபலிக்கும் கடவுள், ஜானுஸ் (கீழ்கண்ட படத்தை பார்க்கவும்). ரோமானிய காலத்தில் ஜனவரி வருடத்தின் 11-வது மாதமாகவும் மார்ச் (March) வருடத்தின் முதல் மாதமாகவும் இருந்திருக்கின்றது. மார்ச் மாதத்தில்தான் ரோமானியர்கள் பயிர்களை விளைவித்து விட்டு போருக்கு செல்வார்களாம். போருக்குரிய கடவுளான மாஸ்-லிருந்து (Mars) மார்ச் மாதம் பெயர் பெற்றிருக்கிறது.


சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆகஸ்தஸ் சீசர் (Augustus Caesar) காலத்தில் ரோமானியர்கள் நாட்டின் அரசியல் அமைப்பை போர்காலத்தில், அதாவது வழக்கமான மார்ச் மாதத்தில் நிர்ணயிப்பதைவிட அதற்கு இரண்டு மாதங்கள் முன்பே அரசை நிர்ணயிப்பது என்று தீர்மானித்திருக்கின்றனர். இந்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே ரோமானியர்கள் தங்கள் அரசமைப்பை ஜனவரி மாதத்தில் அமைத்து ஜனவரியே வருடத்தின் முதல் மாதமாகவும் வழக்கத்திற்கு கொண்டு வந்திருக்கின்றனர்.

இதே மாதிரிதான் அமெரிக்காவிலும் மார்ச் மாதத்தில் அதிபருக்கான பதவி பிரமாணம் ஏற்கும் சடங்கு வழக்கத்தில் இருந்தது. பிறகு, அமெரிக்க அரசியல் சட்டம் திருத்தப்பட்டு, 1933-ல் அமெரிக்க அதிபராக பிரங்கிலின் டிலானோ ரோஸ்வெல்ட்-தான் (Franklin Delano Roosevelt) ஜனவரி மாதத்தில் அமெரிக்க அதிபராக பொருப்பேற்ற முதல் நபராவார்.

செவ்வாய், 6 ஜனவரி, 2009

சம்பளம் - விளக்கம்

நேற்றுதான் (5/1/2009) கடந்த மாத (டிசம்பர்) சம்பளச் சீட்டு (Pay Slip) எனக்கு கிடைக்கப்பெற்றேன். கிடைத்ததும் அதை என் அலுவலக மேசைமீது இருந்த ஒரு புத்தகத்தின் இடுக்கில் வைத்தேன். இன்று அந்த சம்பளச் சீட்டை எடுக்கையில் அந்த புத்தகத்திலிருந்த சில பக்கங்கள் எதேர்ச்சையாகத் திரும்பி கீழ்கண்ட குறிப்பை மீண்டும் ஞாபகப்படுத்தியது.

“தமிழில் அரிசிக்கு (நெல்) சம்பா என்று ஒரு பெயர் உண்டு. சீரகச் சம்பா என்று ஒருவகை அரிசியின் பெயர் கேள்விப் பட்டிருக்கலாம். இப்படி நெல் தான் உழைப்பவருக்கு, வேலை செய்பவருக்குக் கூலியாகத் தரப்பட்டது. அளம் என்ற சொல் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தைக் குறிக்கும். உப்பு+அளம்=உப்பளம். அவரவர்க்கான கூலிக்கான நெல்லைக் குவியல் குவியலாகக் குவித்து வைக்கும்போது அந்தப் பகுதி சம்பா+அளம் என்று சுட்டப்படும். அது உங்கள் சம்பா அளம். இது உங்கள் சம்பா அளம் என்று நெற்குவியலைச் சுட்டியதால் சம்பளம் என்ற சொல் பிறந்திருக்க வேண்டும்.”

'சொன்னார்கள் சொன்னார்கள் பாகம்-1' என்ற புத்தகத்திலிருந்து, 165-வது பக்கத்தில் சுகி.சிவம் அவர்களால் குறிப்பிடப்பட்டது.

செவ்வாய், 30 டிசம்பர், 2008

ஸ்ரீ மரத்தாண்டவர் கோயில்

நேற்று 29/12/2008, நான், சிவா மற்றும் ஜெயா மூவரும் காலை மணி 7.15-க்கு காஜாங்கிலிருந்து (Kajang) மாரானுக்கு (Maran) மரத்தாண்டவரை தரிசிக்க புறப்பட்டோம். மிகவும் முக்கியமான மலேசிய இந்து திருதலங்களில் இதுவும் ஒன்று. இந்த முருகன் கோயில், கிழக்குகரை மாநிலமான பஹாங்-ல் (Pahang) அமைந்திருக்கின்றது. ஏறக்குறைய 3 மணி நேரத்தில் கோலாலம்பூரிலிருந்து இந்த கோயிலை அடைந்து விடலாம். காலை மணி 10-க்கு கோயிலை அடைந்து இரண்டாம் கால அபிஷேகத்திலும் பூஜையிலும் கலந்துக் கொண்டோம். பிறகு மதியம் 12.30–க்கு அன்னதானத்திலும் கலந்துக் கொண்டு நன்மை அடைந்தோம்.









மேல் விபரங்களுக்கு:
Mystical Temples of Malaysia

Malaysian Hindu Temples

வெள்ளி, 26 டிசம்பர், 2008

பொன்மொழி - விளக்கம்

பொன்மொழிக்கு விளக்கம் தெரியுமா உங்களுக்கு?

"தங்கத்தின் மதிப்பு என்றும் குறையாது. பொன் ஒன்றுக்குத்தான் இத்தகைய பாதுகாப்பு உண்டு. அதன் மதிப்பு மாறுபடலாம். பெரு நஷ்டம் ஏற்படவே செய்யாது. ஓர் அவசரம் எனில், என்று வேணுமானாலும் விற்றுக் காசாக்கலாம் அல்லது அடகு வைத்துக் கடன் பெறலாம்.

அதனால்தான் என்றும் நிலைத்திருக்கக் கூடிய உண்மைகளுக்குப் ‘பொன்மொழிகள்’ என்று பெயர் வைத்தார்கள். அவற்றின் மதிப்பு என்றும் மாறுபடுவதே கிடையாது."

கற்பகம் புத்தகாலயம் வெளியீட்டில் சுகி. சிவமின் ‘ஞான மலர்கள்’ என்ற தொகுப்பில் கல்கி ராஜேந்திரனின் அணிந்துரையிலிருந்து எடுக்கப்பட்டது.

செவ்வாய், 23 டிசம்பர், 2008

நாலும் தெரிவோம்

'நாலும் தெரிய நாளும் படிப்போம்'. இது ஜெயபக்தி நிறுவனத்தினரின் தாரக மந்திரம். இந்த வாசகம் அவர்களின் புத்தகக் குறியீட்டிலும் (Bookmark) காணலாம். ஒவ்வொரு முறையும் அங்கே புத்தகம் வாங்கும்பொழுது இலவசமாக கிடைக்கப் பெறும் சிலவற்றில் இந்த புத்தகக் குறியீடுகளும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்களுக்கு முன் என் அறையில் ஜெயபக்தியின் புத்தகக் குறியீடு ஒன்று தரையில் கிடக்கக் கண்டேன். அதை எடுக்கையிலேயே, அதில் பொறிக்கப்பட்ட வாசகத்தை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தேன். 'நாலும் தெரிய நாளும் படிப்போம்' என்ற வாசகத்தில் வரும் 'நாலும்' என்ற சொல் எதைக் குறிக்கின்றது என்ற ஆராச்சியில் மனம் இறங்கியது. இந்த வாசகத்தை ஜெயபக்தியே ஆங்கிலத்தில், 'To Know Everything Read Everyday' என்று மொழிப்பெயர்த்திருந்தார்கள். அப்படியெனில், 'நாலும்' என்ற சொல் 'அனைத்தும்' (everything) என்று பொருட்படுமா?

திருப்தியடையாத மனம் மீண்டும் சிந்தனையில் மூழ்கியது...

உடனே நினைவில் உதித்தது, 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' எனும் பழமொழி. இந்த பழமொழிக்கான அர்த்தத்தை கவிஞர் பத்மதேவன், கற்பகம் புத்தகாலயத்தின் 'நாலடியார் (மூலமும்-உரையும்)’ என்ற புத்தகத்தில், 'நால்' என்பது 'நாலடியார்' என்ற நூலையும், 'இரண்டு' என்பது திருக்குறளையும் என்று குறிப்பிடுகிறார்.


'நாலடியார்' என்பது ஒருவரின் பெயரென பலப்பேர் இன்றும் நினைக்கக் கூடும் (நாலடியார் யார் என்று நானும் முன்பு வினவிய காலம் உண்டு). நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனமையால் இதற்கு 'நாலடி' என்று பெயர் உண்டாகிப் பின் சிறப்புப்பற்றிய விகுதியாகிய 'ஆர்' சேர்ந்து, 'நாலடியார்' ஆயிற்று என்று கவிஞர் அவர்கள் தெளிவிக்கின்றார்.

நாலடியாரில் வரும் அனைத்து பாடல்களும் சமண முனிவர்களால் தனித்தனியே பாடப் பெற்று, பிறகு பதுமனார் என்பவரால் தொகுத்து வகுக்க பெற்றிருக்கிறது. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. திருக்குறளுக்கு இணையாகப் போற்றப்படும் இந்நூல் மூன்று பால்களில் (அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பாலை), பதினோரியல்களில், நாற்பது அதிகாரங்களில் அடங்கி; அதிகாரத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் மொத்தம் நானூறு பாடல்களை தாங்கி, 'நாலடி நானூறு' என்ற பெயரும் பெற்றிருக்கின்றது.

பொருட்பாலில் கல்வி அதிகாரத்திலிருந்து ஓர் எடுத்துக்காட்டு:

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா
துலகநூல் ஓதுவதெல்லாம் – கலகல
கூஉம் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்
போஒம் துணையறிவார் இல். (140)


கவிஞர் பத்மதேவனின் உரை:

விசாலமான முறைமைகள் பொருந்திய மெய்ஞ்ஞான நூல்களைக் கற்காமல் உலகியல் விஷயம் சார்ந்த நூல்களையே படித்துக் கொண்டிருப்பதெல்லாம் கலகல என்று அர்த்தமற்றுக் கூவுவதற்கு ஒத்ததாகுமே அல்லாமல், அந்த உலகியல் நூல்களைக் கொண்டு மனச்சலனம் போகின்ற தன்மையை அறிந்து கொள்பவர்கள் யாருமில்லை.

அலகு – விசாலம்
கற்பு-முறைமை
கூஉம் துணை – கூவுவதற்கு ஒத்தது
போஒம் – போகும்.


மேல் விபரங்களுக்கு:
http://ta.wikipedia.org/wiki/நாலடியார்
http://www.infitt.org/pmadurai/pm_etexts/pdf/pm0016.pdf

வியாழன், 11 டிசம்பர், 2008

வாழ்க பாரதி!


ஆங்கில நாள்படி, இன்று (11/12), மகாகவி பாரதியார் இப்பூவுலகில் அவதரித்த பொன்னாள். 11/12/1882-ல் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த எட்டையபுரத்தில், திரு. சின்னசாமி ஐயர் மற்றும் இலக்குமியம்மாள் அவர்களுக்கு சுப்பிரமணியனாகப் பிறந்தார்; சுப்பையாவாக செல்லப்பெயரில் வளர்ந்தார்; எட்டையபுர மன்னரால் பாரதியாக வாழ்ந்தார்; மகாகவியாக மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்.

பாரதி தன்னை தானே மிகவும் துள்ளியமாக இப்படி சாட்சிப்படுத்துகிறார்:

அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின்மீது தனியர சாணை,
பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!

(சுயசரிதையில் 49-வது கண்ணி)


இம்மனமுதிர்ச்சியை அவரிடமிருந்து நாம் அவசியமாக கற்றிடல் வேண்டும்.


இந்த அதிசயப் பிறவி இவ்வுலகுக்கு கொடுத்த கவிதைகள் யாவும் அவரின் புரட்சிகரமான சிந்தனையின் வெளிப்பாடே. அவை அனைத்தும் சாகாவரம் பெற்றவை. இன்றும் அவரின் கவிதைகளும் கட்டுரைகளும் இன்றைய நம் வாழ்வியலுக்கு ஏற்புடையதாகவும் வழிகாட்டியாகவும் இருக்கின்றன.

மகாகவி பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு என்னால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டு, என் கனிணி முகப்பில் பதித்த படத்தை (Wallpaper) உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

வாழ்க பாரதி!


படத்தை சொடக்கி பதிவிறக்கம் செய்யவும்.