புதன், 14 ஜனவரி, 2009

பொங்கல் வாழ்த்துக்கள்!

பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!


இந்த இன்ப கூச்சல் தைப்பொங்கலில் மட்டுமல்ல, சிறு வயதில் ஒவ்வொரு முறையும் மதிய உணவுக்கு அம்மா சோற்றை பொங்க வைப்பதை பார்த்த போதெல்லாம் நான் துதித்தது இந்த தாரக மந்திரத்தையே.

அன்று எனக்கு தினம் தினம் பொங்கல் திருவிழா. இன்று அதை நினைக்கும் பொழுது, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வெளியீட்ட சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் ‘வாழ்வே தவம்’ என்ற புத்தகத்திலிருந்து ‘இன்று நாம் புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற கட்டுரை நினைவிற்கு வருகிறது.

அந்த கட்டுரையிலிருந்து சில வரிகள் பின்வருமாறு:

...நாட்கள் எப்படித் தன்னை தினம் தினம் புதுப்பித்துக் கொள்கின்றனவோ, வருடம் எப்படி தன்னை வருடா வருடம் பிறப்பித்துக்கொள்கின்றதோ, நாமும் தினம் தினம் இன்று நாம் புதிதாய்ப் பிறந்தோம் என்ற பாரதியார் உற்சாகத்தில் நம்மை நாம் புதுபித்துக்கொண்டால் இந்த வாழ்க்கை தினம் தினம் திருவிழாதான்.

அன்று என் பாலிய பருவத்தில் அர்தமின்றி தினம் தினம் கொண்டாடிய திருவிழாவின் மகத்துவத்தை இன்று இளைய பருவத்தில் அர்த்தத்துடன் உணர்ந்துக் கொண்டேன்.

பொங்கல் வாழ்த்துக்கள்!

வெள்ளி, 9 ஜனவரி, 2009

ஜனவரி, வருடத்தின் ஆரம்பமா இறுதியா?

இந்த கேள்விகளுக்கு மார்க் சில்வர் (Marc Silver) பின்வரும் தன் வலைபதிவில் பதிலளித்திருக்கின்றார். http://ngm.typepad.com/pop_omnivore/2009/01/how-january-wen.html.

ஜனவரி (January), ஜானுஸ் (Janus) என்ற இருதலைகள் கொண்ட ரோமன் கடவுளின் பெயரிலிருந்து வந்ததாகும். ஆரம்பமும் இறுதியையும் பிரதிபலிக்கும் கடவுள், ஜானுஸ் (கீழ்கண்ட படத்தை பார்க்கவும்). ரோமானிய காலத்தில் ஜனவரி வருடத்தின் 11-வது மாதமாகவும் மார்ச் (March) வருடத்தின் முதல் மாதமாகவும் இருந்திருக்கின்றது. மார்ச் மாதத்தில்தான் ரோமானியர்கள் பயிர்களை விளைவித்து விட்டு போருக்கு செல்வார்களாம். போருக்குரிய கடவுளான மாஸ்-லிருந்து (Mars) மார்ச் மாதம் பெயர் பெற்றிருக்கிறது.


சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆகஸ்தஸ் சீசர் (Augustus Caesar) காலத்தில் ரோமானியர்கள் நாட்டின் அரசியல் அமைப்பை போர்காலத்தில், அதாவது வழக்கமான மார்ச் மாதத்தில் நிர்ணயிப்பதைவிட அதற்கு இரண்டு மாதங்கள் முன்பே அரசை நிர்ணயிப்பது என்று தீர்மானித்திருக்கின்றனர். இந்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே ரோமானியர்கள் தங்கள் அரசமைப்பை ஜனவரி மாதத்தில் அமைத்து ஜனவரியே வருடத்தின் முதல் மாதமாகவும் வழக்கத்திற்கு கொண்டு வந்திருக்கின்றனர்.

இதே மாதிரிதான் அமெரிக்காவிலும் மார்ச் மாதத்தில் அதிபருக்கான பதவி பிரமாணம் ஏற்கும் சடங்கு வழக்கத்தில் இருந்தது. பிறகு, அமெரிக்க அரசியல் சட்டம் திருத்தப்பட்டு, 1933-ல் அமெரிக்க அதிபராக பிரங்கிலின் டிலானோ ரோஸ்வெல்ட்-தான் (Franklin Delano Roosevelt) ஜனவரி மாதத்தில் அமெரிக்க அதிபராக பொருப்பேற்ற முதல் நபராவார்.

செவ்வாய், 6 ஜனவரி, 2009

சம்பளம் - விளக்கம்

நேற்றுதான் (5/1/2009) கடந்த மாத (டிசம்பர்) சம்பளச் சீட்டு (Pay Slip) எனக்கு கிடைக்கப்பெற்றேன். கிடைத்ததும் அதை என் அலுவலக மேசைமீது இருந்த ஒரு புத்தகத்தின் இடுக்கில் வைத்தேன். இன்று அந்த சம்பளச் சீட்டை எடுக்கையில் அந்த புத்தகத்திலிருந்த சில பக்கங்கள் எதேர்ச்சையாகத் திரும்பி கீழ்கண்ட குறிப்பை மீண்டும் ஞாபகப்படுத்தியது.

தமிழில் அரிசிக்கு (நெல்) சம்பா என்று ஒரு பெயர் உண்டு. சீரகச் சம்பா என்று ஒருவகை அரிசியின் பெயர் கேள்விப் பட்டிருக்கலாம். இப்படி நெல் தான் உழைப்பவருக்கு, வேலை செய்பவருக்குக் கூலியாகத் தரப்பட்டது. அளம் என்ற சொல் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தைக் குறிக்கும். உப்பு+அளம்=உப்பளம். அவரவர்க்கான கூலிக்கான நெல்லைக் குவியல் குவியலாகக் குவித்து வைக்கும்போது அந்தப் பகுதி சம்பா+அளம் என்று சுட்டப்படும். அது உங்கள் சம்பா அளம். இது உங்கள் சம்பா அளம் என்று நெற்குவியலைச் சுட்டியதால் சம்பளம் என்ற சொல் பிறந்திருக்க வேண்டும்.

'சொன்னார்கள் சொன்னார்கள் பாகம்-1' என்ற புத்தகத்திலிருந்து, 165-வது பக்கத்தில் சுகி.சிவம் அவர்களால் குறிப்பிடப்பட்டது.