செவ்வாய், 23 டிசம்பர், 2008

நாலும் தெரிவோம்

'நாலும் தெரிய நாளும் படிப்போம்'. இது ஜெயபக்தி நிறுவனத்தினரின் தாரக மந்திரம். இந்த வாசகம் அவர்களின் புத்தகக் குறியீட்டிலும் (Bookmark) காணலாம். ஒவ்வொரு முறையும் அங்கே புத்தகம் வாங்கும்பொழுது இலவசமாக கிடைக்கப் பெறும் சிலவற்றில் இந்த புத்தகக் குறியீடுகளும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்களுக்கு முன் என் அறையில் ஜெயபக்தியின் புத்தகக் குறியீடு ஒன்று தரையில் கிடக்கக் கண்டேன். அதை எடுக்கையிலேயே, அதில் பொறிக்கப்பட்ட வாசகத்தை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தேன். 'நாலும் தெரிய நாளும் படிப்போம்' என்ற வாசகத்தில் வரும் 'நாலும்' என்ற சொல் எதைக் குறிக்கின்றது என்ற ஆராச்சியில் மனம் இறங்கியது. இந்த வாசகத்தை ஜெயபக்தியே ஆங்கிலத்தில், 'To Know Everything Read Everyday' என்று மொழிப்பெயர்த்திருந்தார்கள். அப்படியெனில், 'நாலும்' என்ற சொல் 'அனைத்தும்' (everything) என்று பொருட்படுமா?

திருப்தியடையாத மனம் மீண்டும் சிந்தனையில் மூழ்கியது...

உடனே நினைவில் உதித்தது, 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' எனும் பழமொழி. இந்த பழமொழிக்கான அர்த்தத்தை கவிஞர் பத்மதேவன், கற்பகம் புத்தகாலயத்தின் 'நாலடியார் (மூலமும்-உரையும்)’ என்ற புத்தகத்தில், 'நால்' என்பது 'நாலடியார்' என்ற நூலையும், 'இரண்டு' என்பது திருக்குறளையும் என்று குறிப்பிடுகிறார்.


'நாலடியார்' என்பது ஒருவரின் பெயரென பலப்பேர் இன்றும் நினைக்கக் கூடும் (நாலடியார் யார் என்று நானும் முன்பு வினவிய காலம் உண்டு). நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனமையால் இதற்கு 'நாலடி' என்று பெயர் உண்டாகிப் பின் சிறப்புப்பற்றிய விகுதியாகிய 'ஆர்' சேர்ந்து, 'நாலடியார்' ஆயிற்று என்று கவிஞர் அவர்கள் தெளிவிக்கின்றார்.

நாலடியாரில் வரும் அனைத்து பாடல்களும் சமண முனிவர்களால் தனித்தனியே பாடப் பெற்று, பிறகு பதுமனார் என்பவரால் தொகுத்து வகுக்க பெற்றிருக்கிறது. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. திருக்குறளுக்கு இணையாகப் போற்றப்படும் இந்நூல் மூன்று பால்களில் (அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பாலை), பதினோரியல்களில், நாற்பது அதிகாரங்களில் அடங்கி; அதிகாரத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் மொத்தம் நானூறு பாடல்களை தாங்கி, 'நாலடி நானூறு' என்ற பெயரும் பெற்றிருக்கின்றது.

பொருட்பாலில் கல்வி அதிகாரத்திலிருந்து ஓர் எடுத்துக்காட்டு:

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா
துலகநூல் ஓதுவதெல்லாம் – கலகல
கூஉம் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்
போஒம் துணையறிவார் இல். (140)


கவிஞர் பத்மதேவனின் உரை:

விசாலமான முறைமைகள் பொருந்திய மெய்ஞ்ஞான நூல்களைக் கற்காமல் உலகியல் விஷயம் சார்ந்த நூல்களையே படித்துக் கொண்டிருப்பதெல்லாம் கலகல என்று அர்த்தமற்றுக் கூவுவதற்கு ஒத்ததாகுமே அல்லாமல், அந்த உலகியல் நூல்களைக் கொண்டு மனச்சலனம் போகின்ற தன்மையை அறிந்து கொள்பவர்கள் யாருமில்லை.

அலகு – விசாலம்
கற்பு-முறைமை
கூஉம் துணை – கூவுவதற்கு ஒத்தது
போஒம் – போகும்.


மேல் விபரங்களுக்கு:
http://ta.wikipedia.org/wiki/நாலடியார்
http://www.infitt.org/pmadurai/pm_etexts/pdf/pm0016.pdf

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம்...கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான் என்று ஒரு பழமொழி..அது போல் நாலு விசயங்களைத் தெரிந்துக் கொள்ள தினமும் படிங்கன்னு சொல்லலாமோ?

மு.வேலன் சொன்னது…

[இனியவள் புனிதா] வாருக... வருக...

//கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான்//
இந்த பழமொழியைப் படித்ததும் உடனே ஞாபகம் வருவது ஒரு புதுமொழி, கண்டதைத் தின்பவன் பன்டி(றி) ஆவான்.

//அது போல் நாலு விசயங்களைத் தெரிந்துக் கொள்ள தினமும் படிங்கன்னு சொல்லலாமோ?//
மீண்டும் வந்துவிட்டது 'நாலு'. இது எந்த 'நாலு'? எதைக் குறிக்கிறது?

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,
அருமையான பதிவு...என்னதிது நாலு? என்னையும் குழப்பி விட்டுட்டீங்களே?

மு.வேலன் சொன்னது…

//அருமையான பதிவு...என்னதிது நாலு?//
நீங்களும் நாலு வார்த்தையில் என்னை குழப்பி விட்டுட்டீங்களே...

Jana சொன்னது…

கண்டு, அதைப்படிப்பவன் பண்டிதன் ஆவான என படித்தால் பொருள் எளிதில் விளங்கும்