சனி, 29 நவம்பர், 2008

கலைவாணர் நூற்றாண்டு விழா!

இன்று என்.எஸ். கிருஷ்ணனின் நூற்றாண்டு விழா. அவர் நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி அவதரித்தார். தமிழ் திரையுலகில் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்த நகைச்சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்ணனை ‘கலைவாணர்’ என்றே கலையுலகம் செல்லமாக அழைத்தது. இன்றும் காலத்தால் அழியாத இவரது நகைச்சுவை காட்சிகள் திகட்டாத ஓர் அருமருந்து. கலைவாணர் நமக்கும் தமிழ்த்திரையுலகுக்கும் கிடைத்த ஓர் அற்புதக் கலைக் கழஞ்சியம்.


http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=592
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2388&cls=row4

வியாழன், 27 நவம்பர், 2008

தீவிரவாதம்

மும்பாய் குண்டுவெடிப்பு - 27/11/2008

இன்று நெஞ்சை உலுக்கி என் மனதை மிகவும் பாதித்தது மும்பாய் குண்டுவெடிப்பு. இந்த சம்பவத்தில் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த கொடியச் சம்பவத்திற்கு உலக நாடுகள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

http://mumbaihelp.blogspot.com/
http://www.dinamalar.com/mumbaivideo_main.asp
http://english.aljazeera.net/news/asia/2008/11/20081126211658764667.html


செவ்வாய், 25 நவம்பர், 2008

நினைக்க நினைக்கும் நாள்

திருஇந்திய எழுச்சி!

அன்று (25/11/2007) மலேசிய திருநாட்டின் சரித்திரத்தில் எழுதவேண்டிய நன்னாள்; இன்றோடு ஒரு வருடம் பூர்த்தியாகிறது அந்த எழுச்சி நாள். உலகமே வியந்து அதிர்ந்த நாள். 50 வருட மலேசிய அரசியல் சரித்திரத்தையே புரட்டிப்போட்ட சரித்திர நாள். பல நூராயிரம் மலேசிய இந்தியர்கள் ஒற்றுமையாக உரிமைக் குரல் எழுப்பிய பொன்னாள்!

இந்நாளை நினைத்துப்பார்க்கையில் அன்று மகாகவி பாரதி பாடிய சுதந்திரப் பள்ளுவில் 5-வது சரணம் மனதைத் துளைத்தது...

நாமிருக்கும் நாடுநமது என்பதறிந்தோம் – இது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் – இந்தப்
பூமியில் எவர்க்கும்இனி அடிமைசெய்யோம் – பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்.


இந்த எழுச்சிக்கு வித்திட்ட ஐம்பெரும் காவிய மன்னர்களுக்கு இன்றும் சிறைவாசம். அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

வியாழன், 20 நவம்பர், 2008

அமைதியான ஓய்வில் எம்.என்.நம்பியார்


தமிழ்திரையுலக ஜாம்பவான்களில் ஒருவர், பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் நேற்று (19/11/2008) சென்னையில் காலமானார். இந்திய திரையுலகில் அவர் ஒரு சகாப்தம். சில படங்களின் கதாநாயகராக வலம் வந்தாலும், வில்லன் கதாபாத்திரமே அவரை சிகரத்தின் உச்சிக்கு கொண்டுபோய் நிருத்தியது.

அவரின் நடிப்பை மிகவும் இரசித்துப் பார்க்கும் பல கோடி இரசிகர்களில் நானும் ஒருவன். அப்படி சிறுவயதில் நான் கண் சிமிட்டாமல் இரசித்ததில் குறிப்பிடத்தக்கது, அன்னாரும் எம்.ஜி.ஆரும் (MGR) வாள்சண்டைப் புரியும் காட்சிகள். என்ன நடிப்பு!


என்றும் காலத்தால் அழியாத நடிப்பை வழங்கிய அன்னாருக்கு நன்றி. என்னென்றும் என் நினைவில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் அவருக்கு இந்த வலைப்பதிவில் ஓர் அஞ்சலி.

http://www.indiaglitz.com/channels/tamil/article/43122.html
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2315&cls=row3
http://www.hindu.com/2007/03/15/stories/2007031518020200.htm

ஞாயிறு, 16 நவம்பர், 2008

மீண்டும் சரித்திரம் படைத்தது சந்திரயான்-1

14/11/2008, இந்திய நேரப்படி சரியாக இரவு மணி 8.31, இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியைச் சுமந்த வண்ணம் மூன் இம்பாக்ட் பிராப் (MIP - Moon Impact Probe) வெற்றிகரமாக நிலவின் தரையில் இறங்கியது. சந்திரயான்-1லிருந்து இரவு 8.06 மணிக்கு மூன் இம்பாக்ட் பிராப்பை கழற்றி விடப்பட்டு, 25 நிமிட பயணத்தில் அக்கருவி நிலவின் மேற்பரப்பை அடைந்து சில படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. 1962-ம் ஆண்டில், முதலாவது இந்தியப் பிரதமராகிய ஜவஹர்லால் நேரு அவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட இந்திய விண்வெளித் திட்டத்தை நினைவுக்கூறும் வகையில், அவரின் பிறந்தநாளன்றே நிகழ்த்தப்பட்ட ஒரு வரலாற்றுப்பூர்வமான சாதனை. வாழ்த்துக்கள்!

மூன் இம்பாக்ட் பிராப்பால் எடுக்கப்பட்ட படங்கள்:
http://www.isro.org/pslv-c11/photos/moon_images.htm



மேல் விபரங்களுக்கு:
http://www.isro.org/pressrelease/Nov14_2008.htm
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2272&cls=row4

சனி, 15 நவம்பர், 2008

முதல் முதலாய்...

‘என்னை விட்டுப் போய்விடு’, என் வாழ்வில் முதல் முதலாய் திரையரங்கில் பார்த்த ஸ்பேய்ன் (Spain) நாட்டு திரைப்படம். 13/11/2008, ஜி. எஸ். சி.-யில் (GSC), திரு. எஸ். டி. பாலா அவர்களின் அழைப்பின் பேரில், ‘என்னை விட்டுப் போய்விடு’ (Get Away From Me) என்ற திரைப்படத்தைப் பார்த்து இரசித்தேன். இந்த புதிய அனுபவத்தை அறிமுகப்படுத்திய திரு. எஸ். டி. பாலா அவர்களுக்கு நன்றி!

13-லிருந்து 23-ஆம் நாவம்பர் 2008 வரை நடைப்பெற்றிருக்கும் 9வது ஐரோப்பிய ஒன்றியத்தின் திரைப்பட விழாவை (9th European Union Film Festival) முன்னிட்டு, ஜி. எஸ். சி.-யில் காண்பிக்கப்பட்ட ‘என்னை விட்டுப் போய்விடு’-க்கு தான் நாங்கள் சென்றிருந்தோம்.


சுமார் இரண்டு மணி நேரம் காண்பிக்கப்பட்ட இந்த படம் ஒரு அப்பாவையும் அவர் தம் மகனையுமே சார்ந்து, அவர்களின் உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. தமிழ்த் திரைப்படங்களையும் ஆங்கிலத் திரைப்படங்களையும் மட்டுமே எப்பொழுதாவது திரையரங்கில் பார்ப்பதுண்டு. ஆனால், இந்த படங்களைப் போன்ற பாணியில் இந்த (Get Away From Me) படம் நகராமல் சற்று மாறுபட்டிருந்தது அதன் கதை சொல்லும் விதம். படம் மெல்லவே நகர்ந்தாலும் இறுதிவரை ஆர்வத்துடனே படத்தைப் பார்த்து முடித்தேன்.

திரையரங்கில் விளக்கை அனைத்த பிறகுதான் உள்ளே சென்றோம். அரங்கம் நிரைந்திருந்ததால் முன் வரிசையில் மட்டுமே அமர இடம் கிடைத்தது. அப்பொழுதுப் பார்க்க முடியாத முகங்களை, திரைப்படம் முடிந்ததும் ஏற்றப்பட்ட ஒளியில் பார்த்தபோது சுமார் நூரில் 5 முகங்களே இந்தியர்களைச் சேர்ந்தது, எங்களையும் உட்பட.

1. இதற்கு என்ன காரணம்?

2. ஐரோப்பிய மொழியில் உருவாகும் நல்ல படங்களையும் பார்க்கலாம்தானே?

செவ்வாய், 11 நவம்பர், 2008

பனிச்சிறுத்தை

2008-ன் சிறந்த வனவிலங்கின் படமாக ஹேமிஸ் தேசிய பூங்காவில் (Hemis National Park) வாழும் பனிச்சிறுத்தையின் படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்காவில் வாழும் ஸ்தீவ் வின்டரால் (Steve Winter) இந்த படம் பிடிக்கப்பட்டது. லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகமும் (Natural History Museum of London) பிபிசி வனவாழ் இதழும் (BBC Wildlife Magazine) சேர்ந்து ஏற்பாடு செய்த 2008-ம் ஆண்டின் வனவாழ் படப்பிப்பாளர் போட்டியில் (2008 Wildlife Photographer of the Year competition) இந்தப் படமே வெற்றிப் பெற்றது.


பனிச்சிறுத்தையைப் பற்றி தெரிந்துக்கொள்ள கீழே சொடுக்கவும்:
http://animals.nationalgeographic.com/animals/mammals/snow-leopard.html

ஹேமிஸ் தேசிய பூங்காவைத் தெரிந்துக்கொள்ள கீழே சொடுக்கவும்:
http://en.wikipedia.org/wiki/Hemis_National_Park

2008-ன் சிறந்த வனவிலங்கின் படங்களைப் பார்க்க கீழே சொடுக்கவும்:
http://news.nationalgeographic.com/news/2008/10/photogalleries/best-animal-wildlife-photos/

ஞாயிறு, 9 நவம்பர், 2008

முதல் முதலாய்...

நேற்று, 8/11/2008 சனிக்கிழமை, பங்சாரில் உள்ள பங்சார் சீவூட் கார்டன் ரெஸ்டாரனில் (Bangsar Seafood Garden Restaurant), ஒரே நிறுவனத்தில் பணி புரியும் சக தொழிலாளர், கெல்வின் கோங்கின் (Kelvin Kong) திருமண விருந்துபசரிப்பில் கலந்துக்கொண்டேன். நான் முதல் முதலாய் கலந்துக்கொள்ளும் சீன திருமண விருந்து; நல்ல மகிழ்ச்சியான அனுபவம்.

அங்கு நான் முதல் முதலாய், நின்றுகொண்டு கலக்கும் நகைச்சுவையை (Stand-up Comedy) நேரடியாக பார்த்து இரசித்தேன்; வாய்விட்டுச் சிரித்தேன். நல்ல மகிழ்ச்சியான அனுபவம்.

சுமார் 30 நிமிடங்களாக ஒரு அருமையான நகைச்சுவை படைப்பைப் படைத்தவர் மோன்தி (Monti) என்ற வ்ஓங் முன் தோ (Fong Mun Toh). அவர் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் செய்தார். அதில் ஆழமாக என்னில் பதிந்து சிந்திக்க வைத்த ஒன்று:

“My friend was asked me, why you voted Teresa Kok; Because she is Chinese? NO, I said. I voted her because I am a Chinese.”

அதாவது, தெராசா கோக்வுக்கு ஏன் வாக்களித்தீர், அவர் சீனராக இருப்பதாலா? என்று மோன்தியின் நண்பர் அவரை பார்த்து கேட்டாராம். அதற்கு அவர், இல்லை, அவர் சீனராக இருப்பதினால் அல்ல, நான் சீனராக இருப்பதினால்தான் என்று கூறியினாராம்.

திருமண விருந்தில் வயிற்றுகுக்கூட அல்ல, சிந்தனைக்கும் உணவு பரிமாறப்பட்டது. திருமண தம்பதிகளுக்கு நன்றி.

மோன்தியும் திருமண தம்பதிகளும்:

சனி, 8 நவம்பர், 2008

சொல்

பொறுபற்ற ஒரு சொல் சச்சரவை ஏற்படுத்தும்.
குரூரமான ஒரு சொல் ஒரு வாழ்வை சிதைக்ககூடும்.
ஒரு கசப்பான சொல் காழ்ப்புணர்வை ஏற்படுத்தலாம்.
ஒரு முரட்டுச்சொல் மரணத்தை உண்டாக்கலாம்.
ஒரு கருணையான சொல் பாதையைச் செப்பனிடலாம்.
ஒரு மகிழ்ச்சியான சொல் நாளையே வெளிச்ச மாக்கலாம்.
ஒரு நேரத்திற்குகந்த சொல் இறுக்கத்தைத் தளர்த்தலாம்.
ஒரு அன்பான சொல் காயத்தை ஆற்றி ஆசீர்வதிக்கலாம்.

அருமையான அழுத்தமான இந்த வரிகள், வெ. இறையன்பு ஐ.ஏ.ஸ் அவர்களின் ‘ஏழாவது அறிவு’ (மூன்றாம் பாகம்), 96-ம் பக்கம், ‘சொல்’ என்ற கட்டுரையில் படித்தது.

‘சொல்’, எச்சரிக்கையாக ஒரு சொல்லாளுதலைப் பற்றிய கட்டுரை. ஒரு சொல்லை தவறாக சொல்லும்போதும், தவறாக எழுதும்பொழுதும் ஏற்படும் பின்விளைவுகளை, சில குட்டிக்கதைகளுடன் தெளிவாக சுட்டிக்காட்டுகிறார், வெ. இறையன்பு ஐ.ஏ.ஸ் அவர்கள்.

சொல்லின் ஆளுமையைச் செழிமையாய், பல அதிகாரங்களாய் படைத்திருக்கும் வள்ளுவர், குறிப்பாக 72-ம் அதிகாரமான அவை அறிதலில், 711-வது குறளை இப்படி பாடுகிறார்;

அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர்.

இதற்கு டாக்டர் மு.வரதராசனார், சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்ற சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும் என்று தெளிவுரையிட்டிருக்கின்றார்.

அவை அறிதல், மட்கட் குலத்தின் வாழ்வியலில் எவ்வளவு ஒரு முக்கிய அங்கம் என்பதனை கடந்த 5/11/2008-ல் கூடிய மலேசிய திருநாட்டின் மக்களவையே சான்று! ஆம், பாசிர் சாலாக் (Pasir Salak) மக்களின் பிரதிநிதியும் ஆளுங்கட்சியின் மக்களவை உறுப்பினருமான டத்தோ தாஜுடின் அப்துல் ரஹ்மான் (Datuk Tajuddin Abdul Rahman) மக்களவையில், ஈப்போ பாராட் (Ipoh Barat) மக்களின் பிரதிநிதியான எம். குலசேகரனை ‘Bloody Bastard’ என்று இழிந்திட்ட இந்த இழிச்சொல், மலேசிய மக்களின் பலரையும் (என்னையும் உட்பட) புண்படுத்தி முகம் சுழிக்கச் செய்தது.

பார்க்க: http://www.themalaysianinsider.com/index.php/malaysia/11861-bastard-in-the-house
மற்றும் http://www.malaysiaindru.com/?p=6925



ஒரு தலைவனை பற்றி சிறிது சிந்திக்கும்பொழுது, திருவள்ளுவர் சொல்வதுபோல்,

அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை. (குறள் 635)

அதாவது, அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்; நல்ல தலைவனாவான் என்பதே அக்குறளுக்கு பொருளாகும்.

வள்ளுவன் கூறும் நற்பண்பிலிருந்து விலகி விலங்காய் அவதரித்திருக்கும் சில மக்கட் தலைவர்களை நினைக்கும்பொழுது ஏற்படும் வேதனையைவிட, அப்படிப்பட்ட தலைவர்களையே நம்பியிருக்கும் மக்களை நினைத்தால்தான் வேதனை ஒரு படி அதிகமாகிறது!

இழிச்சொல்லை பயன்படுத்தியவனின் சாவு எப்படி ஈனமாக இருக்கும் என்பதனை மீசைக்கார பாரதி, தன் பாஞ்சாலி சபதத்தில் ‘வீமன் செய்த சபதம்’ மூலமாக கவிதையாய் வடித்திருக்கின்றான். சற்று இந்த கவிதையைப் படித்தபடி, சொல்லைப் பற்றிய சிந்தனையில் நுழைவோம்...

வீமன் செய்த சபதம்

வீமனெழுந் துரைசெய் வான்;-‘இங்கு
விண்ணவ ராணை, பரா சக்தி யாணை;
தாமரைப் பூவினில் வந்தான்-மறை
சாற்றிய தேவன் திருக்கழ லாணை
மாமகளைக் கொண்ட தேவன்-எங்கள்
மரபுக்குத் தேவன் கண்ணன் பதத்தாணை
காமனைக் கண்ணழ லாலே-சுட்டுக்
காலனை வென்றவன் பொன்னடிமீதில்

ஆணையிட் டிஃதுரை செய்வேன்;-இந்த
ஆண்மை யிலாத்துரி யோதனன் றன்னை
பேணும் பெருங்கன லொத்தாள்-எங்கள்
பெண்டு திரெளபதியைத் தொடைமீதில்
நாணின்றி ‘வந்திரு’ என்றான்-இந்த
நாய்மக னாந்துரி யோதனன் றன்னை,
மாணற்ற மன்னர்கண் முன்னே-என்றன்
வன்மையி னால்யுத்த ரங்கத்தின் கண்ணே,

தொடையைப் பிளந் துயிர் மாய்ப்பேன்-தம்பி
சூரத் துச்சாதனன் தன்னையு மாங்கே
கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன்;-அங்கு
கள்ளென ஊறு மிரத்தங் குடிப்பேன்,
நடைபெறுங் காண்பி ருலகீர்!-இது
நான்சொல்லும் வார்த்தைஎன் றெண்ணிடல் வேண்டா!
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை-இது
சாதனை செய்க, பராசக்தி’ என்றான்.

வியாழன், 6 நவம்பர், 2008

நினைக்க நினைக்கும் நாள்

ஆங்கில நாள்காட்டி படி இன்று நவம்பர் 6. 6 வருடங்களுக்கு முன்பு, 2002-ம் ஆண்டில் இதே நவம்பர் 6-ல் என் முதல் வெளியூர் பயணத்தை மேற்கொண்டேன். என் பெற்றோர்கள் திரு முனியாண்டி மற்றும் திருமதி சுப்பம்மாள் அவர்களின் ஆசியுடன், என் சித்தப்பா திரு இராஜாங்கம் மற்றும் சின்னம்மா திருமதி கோவிந்தமாள் அவர்களின் உதவியுடன் இந்தியாவில் உள்ள புண்ணிய திருதலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு பயனுற்றேன். என்றும் பசுமையாக இருக்கும் அந்நாட்களில் பிடிக்கப்பட்ட பல காட்சிகளில் சில...

(படத்தின் மேல் சொடுக்குங்கள்)

1. பினாங்கிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட சிங்கப்பூர் விமானம். இரவில்தான் சென்னையை அடைந்தோம்.



2. மறுநாள் காலை கண்விழித்து முதலில் சென்னையை பார்த்த முதல் காட்சி.


3. 1305 படிகட்டுகளை கொண்ட, சோலிங்கரில் அமைந்த யோக நரசிம்மர் ஆலயம்.


4. திரிவேணி சங்கமம்.


5. அலஹபாட்டில் நேரு அவர்களின் ‘ஆனந்த பவன்’ இல்லம்.


6. வாரநாசி கங்கை நதி.


7. சீர்காழியில் திருஞான சம்பந்தரின் இல்லம்.


8. பூம்புகாரில் கோவலன் கண்ணகி வாழ்ந்த கால கட்டத்தில் அமைந்திருந்த மாதிரி வீடு.


9. சிதம்பர நடராஜர் கோவிலின் தூண் மற்றும் ஓவியம்.



10. மதுரை மீனாட்சி அம்மன் ஆலய 1000ங்கால் மண்டபம்.


11. மதுரை நாயக்கர் மஹால்.


12. முக்கடல் சந்திப்பில் வள்ளுவரும் விவேகநந்தரும்.


13. தஞ்சை பெரிய கோவிலின் கல்வெட்டில் ஒன்று


14. வீரம் விதைக்கப்பட்ட மண்; கட்டமொம்மன் தூக்கிலிட்ட இடம்.


15. பொன் விளைக்கும் மங்கையர்கள்.

புதன், 5 நவம்பர், 2008

ஒபாமா வெற்றி!

அமெரிக்காவின் 44வது அதிபராக ஒபாமாதான் என்ற மக்கள் தீர்ப்பு அமெரிக்க வரலாற்றை மாற்றி அமைத்த அதிசய நன்னாள்; ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் வெற்றித்திருநாள்; உலகமே கொண்டாடும் பெருநாள்; ஆம், நம்மால் மாற்ற முடியும் என்ற ஒபாமாவின் கூற்று மெய்யாகிய பொன்னாள்!

செவ்வாய், 4 நவம்பர், 2008

தமிழா! மலேசியப் பணத்தில் தமிழா?

ஆகஸ்டு 2008-ன் செம்பருத்தி மாத இதழில், மொழியின் முகங்கள் அங்கத்தில் 29, 30, 31-ஆம் பக்கங்களில் உருவான படைப்பை பார்த்தீர்களா நீங்கள்? நான் பார்த்தேன்; படித்தேன்; மலேசியாவுக்கு முன் மலாயாவில் தாய் தமிழுக்கு கிடைத்த உரிமையை உணர்ந்தேன்; அகம் நெகிழ்ந்தேன். ஆம், அருண், கிள்ளான் அவர்களின் படைப்பில் உருவான ‘மலேசியப் பணத்தில் தமிழ் எழுத்துகள்’ என்ற வரலாற்றுக் கட்டுரையை படித்து சிந்தித்தேன்.


தொடக்கக்கால மலேசியா, அதாவது மலாயாவில் பல்லின மக்களின் ஒற்றுமையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் தமிழ், சீனம், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அச்சிட்ட பணத்தாட்கள் புழக்கத்தில் உள்ளதை இந்த கட்டுரை வழி அருண் அவர்கள் நன்றாக தெளிவிக்கின்றார்.

1935-ஆம் ஆண்டிலிருந்து 1938-ஆம் ஆண்டு வரை சுங்கை பூலோ தொழுநோயாளிகள் மட்டுமே பயன்படுத்த பணநோட்டுகள் வெளியிடப்பட்டிருக்கும் வியப்பான செய்தியும் இக்கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கின்றது.


தமிழ் மொழி இந்திய, இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் நாணயங்களில் உரிமையாய் குடிக்கொண்டிருந்தாலும்; உண்மையான ஆசியா (Truly Asia) என்று மார்தட்டும் மலேசியர்களின் நாணயங்களில் தற்பொழுது தமிழ் எழுத்துக்கள் பொறிக்காததை நம் மண்டையைத் தட்டாமல் தட்டிச் சுட்டிக்காட்டியதற்கு அருணுக்கும் அவர் தம் கட்டுரைக்கும் மற்றும் மக்களின் விழிபுணர்வுக்கு பாடுப்படும் செம்பருத்திக்கும் தலைவணங்குகிறேன்; வாழ்த்துகிறேன்!