சொல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 நவம்பர், 2008

சொல்

பொறுபற்ற ஒரு சொல் சச்சரவை ஏற்படுத்தும்.
குரூரமான ஒரு சொல் ஒரு வாழ்வை சிதைக்ககூடும்.
ஒரு கசப்பான சொல் காழ்ப்புணர்வை ஏற்படுத்தலாம்.
ஒரு முரட்டுச்சொல் மரணத்தை உண்டாக்கலாம்.
ஒரு கருணையான சொல் பாதையைச் செப்பனிடலாம்.
ஒரு மகிழ்ச்சியான சொல் நாளையே வெளிச்ச மாக்கலாம்.
ஒரு நேரத்திற்குகந்த சொல் இறுக்கத்தைத் தளர்த்தலாம்.
ஒரு அன்பான சொல் காயத்தை ஆற்றி ஆசீர்வதிக்கலாம்.

அருமையான அழுத்தமான இந்த வரிகள், வெ. இறையன்பு ஐ.ஏ.ஸ் அவர்களின் ‘ஏழாவது அறிவு’ (மூன்றாம் பாகம்), 96-ம் பக்கம், ‘சொல்’ என்ற கட்டுரையில் படித்தது.

‘சொல்’, எச்சரிக்கையாக ஒரு சொல்லாளுதலைப் பற்றிய கட்டுரை. ஒரு சொல்லை தவறாக சொல்லும்போதும், தவறாக எழுதும்பொழுதும் ஏற்படும் பின்விளைவுகளை, சில குட்டிக்கதைகளுடன் தெளிவாக சுட்டிக்காட்டுகிறார், வெ. இறையன்பு ஐ.ஏ.ஸ் அவர்கள்.

சொல்லின் ஆளுமையைச் செழிமையாய், பல அதிகாரங்களாய் படைத்திருக்கும் வள்ளுவர், குறிப்பாக 72-ம் அதிகாரமான அவை அறிதலில், 711-வது குறளை இப்படி பாடுகிறார்;

அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர்.

இதற்கு டாக்டர் மு.வரதராசனார், சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்ற சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும் என்று தெளிவுரையிட்டிருக்கின்றார்.

அவை அறிதல், மட்கட் குலத்தின் வாழ்வியலில் எவ்வளவு ஒரு முக்கிய அங்கம் என்பதனை கடந்த 5/11/2008-ல் கூடிய மலேசிய திருநாட்டின் மக்களவையே சான்று! ஆம், பாசிர் சாலாக் (Pasir Salak) மக்களின் பிரதிநிதியும் ஆளுங்கட்சியின் மக்களவை உறுப்பினருமான டத்தோ தாஜுடின் அப்துல் ரஹ்மான் (Datuk Tajuddin Abdul Rahman) மக்களவையில், ஈப்போ பாராட் (Ipoh Barat) மக்களின் பிரதிநிதியான எம். குலசேகரனை ‘Bloody Bastard’ என்று இழிந்திட்ட இந்த இழிச்சொல், மலேசிய மக்களின் பலரையும் (என்னையும் உட்பட) புண்படுத்தி முகம் சுழிக்கச் செய்தது.

பார்க்க: http://www.themalaysianinsider.com/index.php/malaysia/11861-bastard-in-the-house
மற்றும் http://www.malaysiaindru.com/?p=6925



ஒரு தலைவனை பற்றி சிறிது சிந்திக்கும்பொழுது, திருவள்ளுவர் சொல்வதுபோல்,

அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை. (குறள் 635)

அதாவது, அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்; நல்ல தலைவனாவான் என்பதே அக்குறளுக்கு பொருளாகும்.

வள்ளுவன் கூறும் நற்பண்பிலிருந்து விலகி விலங்காய் அவதரித்திருக்கும் சில மக்கட் தலைவர்களை நினைக்கும்பொழுது ஏற்படும் வேதனையைவிட, அப்படிப்பட்ட தலைவர்களையே நம்பியிருக்கும் மக்களை நினைத்தால்தான் வேதனை ஒரு படி அதிகமாகிறது!

இழிச்சொல்லை பயன்படுத்தியவனின் சாவு எப்படி ஈனமாக இருக்கும் என்பதனை மீசைக்கார பாரதி, தன் பாஞ்சாலி சபதத்தில் ‘வீமன் செய்த சபதம்’ மூலமாக கவிதையாய் வடித்திருக்கின்றான். சற்று இந்த கவிதையைப் படித்தபடி, சொல்லைப் பற்றிய சிந்தனையில் நுழைவோம்...

வீமன் செய்த சபதம்

வீமனெழுந் துரைசெய் வான்;-‘இங்கு
விண்ணவ ராணை, பரா சக்தி யாணை;
தாமரைப் பூவினில் வந்தான்-மறை
சாற்றிய தேவன் திருக்கழ லாணை
மாமகளைக் கொண்ட தேவன்-எங்கள்
மரபுக்குத் தேவன் கண்ணன் பதத்தாணை
காமனைக் கண்ணழ லாலே-சுட்டுக்
காலனை வென்றவன் பொன்னடிமீதில்

ஆணையிட் டிஃதுரை செய்வேன்;-இந்த
ஆண்மை யிலாத்துரி யோதனன் றன்னை
பேணும் பெருங்கன லொத்தாள்-எங்கள்
பெண்டு திரெளபதியைத் தொடைமீதில்
நாணின்றி ‘வந்திரு’ என்றான்-இந்த
நாய்மக னாந்துரி யோதனன் றன்னை,
மாணற்ற மன்னர்கண் முன்னே-என்றன்
வன்மையி னால்யுத்த ரங்கத்தின் கண்ணே,

தொடையைப் பிளந் துயிர் மாய்ப்பேன்-தம்பி
சூரத் துச்சாதனன் தன்னையு மாங்கே
கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன்;-அங்கு
கள்ளென ஊறு மிரத்தங் குடிப்பேன்,
நடைபெறுங் காண்பி ருலகீர்!-இது
நான்சொல்லும் வார்த்தைஎன் றெண்ணிடல் வேண்டா!
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை-இது
சாதனை செய்க, பராசக்தி’ என்றான்.