புதன், 4 மார்ச், 2009

இருவர் 2 – தமிழ் மேடை நாடகம்


பல மாதங்களாக காத்திருந்த இந்த தமிழ் மேடை நாடகத்தை காண முதல் காட்சிக்கு பசியையும் பொருட்படுத்தாமல் அலுவல் முடிந்ததும் என் நண்பர்களுடன் நேற்றிரவு (03/03/2009) இஸ்தானா புடாயாவிற்கு (Istana Budaya) சிட்டுக் குருவியாய் பறந்தேன். இரவு 8.31-க்கு தொடங்கிய நாடகத்தை, கடுமையான வாகன நெரிசலின் காரணமாக சற்று தாமதமாக ஏறக்குறைய இரவு 8.45-லிருந்துதான் பார்க்க நேர்ந்தது. முப்பது வெள்ளி நுழைச்சீட்டில் முப்புற இருக்கையில் தெளிவாக காட்சிகளைக் காணும்படி அமைந்த அமர்வு மகிழ்ச்சி.


2004-ஆம் ஆண்டு அறங்கேறிய இருவர், மலேசியாவிலும் தமிழகத்திலும் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட வெற்றிப் படைப்பு. மலேசிய நாட்டில் முதல் முறையாக இருவர்களை மட்டுமே தாங்கிய மேடை நாடகம் என்று மலேசிய சாதனை புத்தகத்தில் (Malaysia Book of Records) இடம்பெற்று சாதனை படைத்தது இந்த ‘இருவர்’.

இந்த சாதனைகளுக்கு ஆதாரமான இந்த நூற்றாண்டின் மலேசிய தமிழர்களுக்கு கிடைத்த ஒரு புதையல் இயக்குனர் எஸ். டி. பாலா; அவர்களின் மற்றொரு சிறந்த படைப்புதான் இந்த ‘இருவர் 2’ தமிழ் மேடை நாடகம். இது 2009-ஆம் ஆண்டின் இவரின் முதல் படைப்பாக மலர்ந்தாலும், தமிழ் மேடை நாடகங்களில் இது இவரின் 20-வது படைப்பு.


மலேசிய திருநாட்டு தமிழ் மேடை நாடகத்தின் அழிவை உயிர்பித்த இந்த சாதாரண மனிதனின் சாதனை பல. எல்லாம் மேடை நாடகத்தினாலேயே தேடி வந்தது. தமிழகத்தையே பேச வைத்த இவரின் இருவர், இயக்குனர் சிகரம் பாலசந்தரையே மனதார பாராட்ட வைத்ததுதான் குறிப்பிடத்தக்கது.

ஒரு குடும்பத் தலைவனுக்கும் குடும்பத் தலைவிக்கும் ஏற்படும் கருத்துவேறுபாட்டின் விளைவுகளை மையமாக வைத்து நகர்த்திய கதை, இருவர் 2. சுமார் இரண்டு மணி நேரங்கள் தோய்வில்லாமல் நகர்ந்த இந்த நாடகம் என் பசியையும் மறக்கவைத்தது. மிகவும் சிறப்பாக இரசிக்கும்படியாக இந்த நாடகம் அமைந்தற்கு கூடியிருந்த நாற்பது இரசிகர்களின் கைத்தட்டலே சாட்சி. அதைவிட, இரசிகர்களாகிய நாங்கள் அனைவரும் இறுதிவரை கவனச்சிதறல் இல்லாமல் அரங்கிலேயே கட்டுண்டு கிடந்தது மற்றுமொரு சாட்சி.

இந்த தரமான படைப்புக்கு எஸ். டி. பாலாவிற்கும் அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி; வாழ்த்துக்கள்! குறிப்பாக இந்த மேடைநாடகத்தின் கதாபாத்திரங்களுக்கு உயிர்க்கொடுத்து வாழ்ந்து காட்டிய, வாழ்ந்துக் கொண்டிருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!


http://www.nst.com.my/Current_News/NST/Monday/Features/20090301191957/Article/indexF_html

http://kanaigal.blogspot.com/2009/02/11_19.html