செவ்வாய், 30 டிசம்பர், 2008

ஸ்ரீ மரத்தாண்டவர் கோயில்

நேற்று 29/12/2008, நான், சிவா மற்றும் ஜெயா மூவரும் காலை மணி 7.15-க்கு காஜாங்கிலிருந்து (Kajang) மாரானுக்கு (Maran) மரத்தாண்டவரை தரிசிக்க புறப்பட்டோம். மிகவும் முக்கியமான மலேசிய இந்து திருதலங்களில் இதுவும் ஒன்று. இந்த முருகன் கோயில், கிழக்குகரை மாநிலமான பஹாங்-ல் (Pahang) அமைந்திருக்கின்றது. ஏறக்குறைய 3 மணி நேரத்தில் கோலாலம்பூரிலிருந்து இந்த கோயிலை அடைந்து விடலாம். காலை மணி 10-க்கு கோயிலை அடைந்து இரண்டாம் கால அபிஷேகத்திலும் பூஜையிலும் கலந்துக் கொண்டோம். பிறகு மதியம் 12.30–க்கு அன்னதானத்திலும் கலந்துக் கொண்டு நன்மை அடைந்தோம்.









மேல் விபரங்களுக்கு:
Mystical Temples of Malaysia

Malaysian Hindu Temples

வெள்ளி, 26 டிசம்பர், 2008

பொன்மொழி - விளக்கம்

பொன்மொழிக்கு விளக்கம் தெரியுமா உங்களுக்கு?

"தங்கத்தின் மதிப்பு என்றும் குறையாது. பொன் ஒன்றுக்குத்தான் இத்தகைய பாதுகாப்பு உண்டு. அதன் மதிப்பு மாறுபடலாம். பெரு நஷ்டம் ஏற்படவே செய்யாது. ஓர் அவசரம் எனில், என்று வேணுமானாலும் விற்றுக் காசாக்கலாம் அல்லது அடகு வைத்துக் கடன் பெறலாம்.

அதனால்தான் என்றும் நிலைத்திருக்கக் கூடிய உண்மைகளுக்குப் ‘பொன்மொழிகள்’ என்று பெயர் வைத்தார்கள். அவற்றின் மதிப்பு என்றும் மாறுபடுவதே கிடையாது."

கற்பகம் புத்தகாலயம் வெளியீட்டில் சுகி. சிவமின் ‘ஞான மலர்கள்’ என்ற தொகுப்பில் கல்கி ராஜேந்திரனின் அணிந்துரையிலிருந்து எடுக்கப்பட்டது.

செவ்வாய், 23 டிசம்பர், 2008

நாலும் தெரிவோம்

'நாலும் தெரிய நாளும் படிப்போம்'. இது ஜெயபக்தி நிறுவனத்தினரின் தாரக மந்திரம். இந்த வாசகம் அவர்களின் புத்தகக் குறியீட்டிலும் (Bookmark) காணலாம். ஒவ்வொரு முறையும் அங்கே புத்தகம் வாங்கும்பொழுது இலவசமாக கிடைக்கப் பெறும் சிலவற்றில் இந்த புத்தகக் குறியீடுகளும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்களுக்கு முன் என் அறையில் ஜெயபக்தியின் புத்தகக் குறியீடு ஒன்று தரையில் கிடக்கக் கண்டேன். அதை எடுக்கையிலேயே, அதில் பொறிக்கப்பட்ட வாசகத்தை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தேன். 'நாலும் தெரிய நாளும் படிப்போம்' என்ற வாசகத்தில் வரும் 'நாலும்' என்ற சொல் எதைக் குறிக்கின்றது என்ற ஆராச்சியில் மனம் இறங்கியது. இந்த வாசகத்தை ஜெயபக்தியே ஆங்கிலத்தில், 'To Know Everything Read Everyday' என்று மொழிப்பெயர்த்திருந்தார்கள். அப்படியெனில், 'நாலும்' என்ற சொல் 'அனைத்தும்' (everything) என்று பொருட்படுமா?

திருப்தியடையாத மனம் மீண்டும் சிந்தனையில் மூழ்கியது...

உடனே நினைவில் உதித்தது, 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' எனும் பழமொழி. இந்த பழமொழிக்கான அர்த்தத்தை கவிஞர் பத்மதேவன், கற்பகம் புத்தகாலயத்தின் 'நாலடியார் (மூலமும்-உரையும்)’ என்ற புத்தகத்தில், 'நால்' என்பது 'நாலடியார்' என்ற நூலையும், 'இரண்டு' என்பது திருக்குறளையும் என்று குறிப்பிடுகிறார்.


'நாலடியார்' என்பது ஒருவரின் பெயரென பலப்பேர் இன்றும் நினைக்கக் கூடும் (நாலடியார் யார் என்று நானும் முன்பு வினவிய காலம் உண்டு). நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனமையால் இதற்கு 'நாலடி' என்று பெயர் உண்டாகிப் பின் சிறப்புப்பற்றிய விகுதியாகிய 'ஆர்' சேர்ந்து, 'நாலடியார்' ஆயிற்று என்று கவிஞர் அவர்கள் தெளிவிக்கின்றார்.

நாலடியாரில் வரும் அனைத்து பாடல்களும் சமண முனிவர்களால் தனித்தனியே பாடப் பெற்று, பிறகு பதுமனார் என்பவரால் தொகுத்து வகுக்க பெற்றிருக்கிறது. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. திருக்குறளுக்கு இணையாகப் போற்றப்படும் இந்நூல் மூன்று பால்களில் (அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பாலை), பதினோரியல்களில், நாற்பது அதிகாரங்களில் அடங்கி; அதிகாரத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் மொத்தம் நானூறு பாடல்களை தாங்கி, 'நாலடி நானூறு' என்ற பெயரும் பெற்றிருக்கின்றது.

பொருட்பாலில் கல்வி அதிகாரத்திலிருந்து ஓர் எடுத்துக்காட்டு:

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா
துலகநூல் ஓதுவதெல்லாம் – கலகல
கூஉம் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்
போஒம் துணையறிவார் இல். (140)


கவிஞர் பத்மதேவனின் உரை:

விசாலமான முறைமைகள் பொருந்திய மெய்ஞ்ஞான நூல்களைக் கற்காமல் உலகியல் விஷயம் சார்ந்த நூல்களையே படித்துக் கொண்டிருப்பதெல்லாம் கலகல என்று அர்த்தமற்றுக் கூவுவதற்கு ஒத்ததாகுமே அல்லாமல், அந்த உலகியல் நூல்களைக் கொண்டு மனச்சலனம் போகின்ற தன்மையை அறிந்து கொள்பவர்கள் யாருமில்லை.

அலகு – விசாலம்
கற்பு-முறைமை
கூஉம் துணை – கூவுவதற்கு ஒத்தது
போஒம் – போகும்.


மேல் விபரங்களுக்கு:
http://ta.wikipedia.org/wiki/நாலடியார்
http://www.infitt.org/pmadurai/pm_etexts/pdf/pm0016.pdf

வியாழன், 11 டிசம்பர், 2008

வாழ்க பாரதி!


ஆங்கில நாள்படி, இன்று (11/12), மகாகவி பாரதியார் இப்பூவுலகில் அவதரித்த பொன்னாள். 11/12/1882-ல் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த எட்டையபுரத்தில், திரு. சின்னசாமி ஐயர் மற்றும் இலக்குமியம்மாள் அவர்களுக்கு சுப்பிரமணியனாகப் பிறந்தார்; சுப்பையாவாக செல்லப்பெயரில் வளர்ந்தார்; எட்டையபுர மன்னரால் பாரதியாக வாழ்ந்தார்; மகாகவியாக மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்.

பாரதி தன்னை தானே மிகவும் துள்ளியமாக இப்படி சாட்சிப்படுத்துகிறார்:

அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின்மீது தனியர சாணை,
பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!

(சுயசரிதையில் 49-வது கண்ணி)


இம்மனமுதிர்ச்சியை அவரிடமிருந்து நாம் அவசியமாக கற்றிடல் வேண்டும்.


இந்த அதிசயப் பிறவி இவ்வுலகுக்கு கொடுத்த கவிதைகள் யாவும் அவரின் புரட்சிகரமான சிந்தனையின் வெளிப்பாடே. அவை அனைத்தும் சாகாவரம் பெற்றவை. இன்றும் அவரின் கவிதைகளும் கட்டுரைகளும் இன்றைய நம் வாழ்வியலுக்கு ஏற்புடையதாகவும் வழிகாட்டியாகவும் இருக்கின்றன.

மகாகவி பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு என்னால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டு, என் கனிணி முகப்பில் பதித்த படத்தை (Wallpaper) உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

வாழ்க பாரதி!


படத்தை சொடக்கி பதிவிறக்கம் செய்யவும்.


சனி, 6 டிசம்பர், 2008

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிற கதை...

இன்று (6/12/2008) காலை 7-க்குதான் நானும் என் பாலிய நண்பர் யுமன்+யுனிவர்ஸின் பதிவருமான சு.சிவநேசனும் கோலாலம்பூரிலிருந்து எங்கள் சொந்த ஊர் சுங்கைப்பட்டாணிக்கு வந்தடைந்தோம். அவரின் வாகனத்திலேயே, கோலாலம்பூரிலிருந்து ஜூரு (Juru) வரை, பழைய சாலை வழியே கட்டணமின்றி பயணத்தை மேற்கொண்டு பிறகு சுங்கை டூவாவிலிருந்து (Sungai Dua) சுங்கைப்பட்டாணி வரை கட்டண நெடுஞ்சாலையை பயண்படுத்தி வீடு வந்தடைந்தோம். வரும் வழியில் வாழ்க்கைப் பயணத்தின் பதிவருமான அருமை நண்பர் திரு. விக்கியை சந்திக்கும் ஒரு வாய்பு கிட்டியது. ஏறக்குறைய முற்பகல் இரண்டு மணியிலிருந்து (2am) மலேசிய தமிழ் பதிவாளர்களைப் பற்றியும் அவர்களின் பதிவுகளைப் பற்றியும் சிந்தித்துப்பார்த்து கோபேங்கிலிருந்து (Gopeng) மூன்றரை மணிக்கு (3.30am) திரு. விக்கியிடம் விடைப்பெற்றுக் கொண்டோம்.

கலைப்பான பயணத்தை மனநிறைவான சந்திப்பு ஆட்கொண்டிருந்தாலும், வீட்டை அடைந்ததும் முதலில் ஒரு ‘குட்டி தூக்கம்’ என்னவோ தேவையாகவே இருந்தது. காலை 10 மணிக்கு எழுந்து, காலை கடன்களை முடித்து விட்டு இன்றைய மக்கள் ஓசையைப் புரட்டிப் பார்த்தேன். எனது பாணியில் வழக்கம் போல ‘அதே குப்பை’-கள் தான். பெரும்பான்மையான மலேசிய தமிழர்களின் பொழுது போகுவதற்கும் வாய் அசைப்போடுவதற்கும் தற்சமயம் பேச கிடைத்த தகவல், நாட்டில் ஒரே பள்ளி முறையைக் கொண்டு வர வேண்டும் என துடிக்கும் ஜெர்லுன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முக்ரிஸ் மகாதீரின் கூற்று!

இந்த கூற்றைப் பற்றி இன்றைய மக்கள் ஓசையில், நம் நாட்டு (மலேசிய நாட்டைதான் சொல்கிறேன்) சமுதாய இயக்கங்களும் சமுதாய உணர்வாளர்களும் நன்றாகவே எழுத்தின் மூலம் தங்கள் ஆத்திரத்தை-அதிருப்தியை-ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பது, குப்பைகளுக்கிடையிலிருந்து கிடைத்த மாணிக்கங்களாகவே நான் கருதுகிறேன்! இந்த மாணிக்கங்களில், கெடா மாநில மலாயா தமிழ்ப்பள்ளிகளின் தலைவர் திரு. சேம் சுப்பிரமணியம் அவர்களின் ‘முக்ரிஸ் அப்படி பேசியதற்கு யார் காரணம்?’ என்ற கட்டுரை என் மனதை சற்று பாரமாக்கியது; சிந்தனைச் செய்ய தூண்டியது; இந்த பதிவையும் பதிய வைத்தது. ஐயா அவர்களின் கருத்து ஒரு அறுச்சுவை விருந்து; விலைமதிப்பில்லா மாணிக்க கொத்து. ஐயாவின் கருத்தைத் தொகுத்த கு.அன்பரசன் அவர்களுக்கும் அதை பிரசுரித்த மக்கள் ஓசைக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!

சுங்கைப்பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் என் ஐந்தாம் ஆண்டு வகுப்பு ஆசிரியராகவும் மனிதனும் சுற்றுச்சூழலும் சொல்லிக் கொடுத்த பாட ஆசிரியராகவும் எனக்கு அவர் கிடைக்கப்பெற்றதமைக்காக இவ்வளவு தூக்கி வைத்து திரு. சேம் சுப்பிரமணியம் அவர்களை நான் புகழ்ந்து கொண்டிருக்கவில்லை. இந்நாட்டின் பொறுப்புள்ள பல தமிழர்களின் உண்மையான பொறுப்பில்லாச் செயல்களைச் சுட்டிக்காட்டி, அதன் பின்விளைவுகளையும் இரத்தினச் சுருக்கமாகக் கூறியிருக்கும் அவரின் சமுதாயச் சிந்தனையைத்தான் பாராட்டத்தக்கது என்று நான் மீண்டும் கூறிக்கொள்கிறேன்.

ஐயா அவர்கள் அப்படி என்னதான் சிந்திக்க தூண்டுகிறார்?

மழைக்குக்கூட தங்களும் ஒதுங்காமல் தங்கள் பிள்ளைகளையும் தமிழ்ப்பள்ளி பக்கம் ஒதுங்க விடாமல் இருக்கின்ற பல கறுப்பு துரைகள், இன்று தாய்மொழி பள்ளிக் கூடங்கள் மூடப்பட வேண்டாம் என்று அறிக்கை விடும் செயலை ‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத’ கதையாக வர்ணித்திருப்பது அருமை!

முதலில் அவர் எழுப்பிய கேள்வியைப் பார்ப்போம். முக்ரிஸ் அப்படி பேசியதற்கு யார் காரணம்? இந்த கேள்வியை கேட்ட அவரே இந்த கேள்விக்கு பதில்களையும் அளிக்கிறார்.

காரணம் 1:
பெரும்பாலான நமது சமுதாய தலைவர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பாமல் இருப்பது.

காரணம் 2:
பெரும்பாலான தலைமையாசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பாமல் இருப்பது.

காரணம் 3:
பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பாமல் இருப்பது.

மேற்குறிப்பிட்ட முக்காரணங்களுமேதான் முக்ரிஸ் போன்ற அரசியல் வியாதியர்களுக்கு நமது சமுதாய உரிமைகளை உரசிப் பார்க்க வழிவகுக்கிறது என்று உணர்த்துகிறார்.

இப்படி கேள்வியைத் தொடுத்து பதில்களையும் சரமாக கொடுத்த திரு. சேம் சுப்பிரமணியம், இந்த பிரச்சனைக்கு தீர்வையும் முழு நிவாரணத்தையும் கூட அளிக்க மறக்கவில்லை. வருகின்ற 2009ஆம் ஆண்டிலுருந்து நமது தலைவர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கே அனுப்ப வேண்டும் என்பதை ஒரு சவாலாகவே ஏற்கச் சொல்கிறார்.

அப்படி அனுப்புவதால் 600க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளை மலேசியாவில் உருவாக்கலாம் என்ற நம்பிக்கையையும் முன்வைத்து அரசாங்கத்திடமிருந்து பல சலுகைகளையும் பெற முடியும்மென நமக்கு உணர்த்துகிறார்.

இந்த வேளையில், உங்களுடன் ஒரு உதாரண மனிதரை பற்றி பகிர்ந்துகொள்வதில் கடமைப் பட்டுள்ளேன். அவர் வேறு யாருமல்ல என்னை வளர்த்து ஆளாக்கிய என் தந்தை திரு. முனியாண்டி அவர்கள்தான். இப்பொழுது பதவி ஓய்வில் இருக்கும் ஒரு முன்னாள் தமிழ்ப்பள்ளி ஆசிரியர். அவர் படித்தது சுங்கைப்பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளி. அவரின் பிள்ளைகளாகிய எங்கள் ஐவரையும் (என்னையும் என் நான்கு அக்காள்களையும்) படிக்க வைத்தது அதே சுங்கைப்பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளியிலேயேதான். இந்த அரியச் செயல் தமிழினத்திற்கு ஒரு முன் உதாரணம்.