ஆகஸ்டு 2008-ன் செம்பருத்தி மாத இதழில், மொழியின் முகங்கள் அங்கத்தில் 29, 30, 31-ஆம் பக்கங்களில் உருவான படைப்பை பார்த்தீர்களா நீங்கள்? நான் பார்த்தேன்; படித்தேன்; மலேசியாவுக்கு முன் மலாயாவில் தாய் தமிழுக்கு கிடைத்த உரிமையை உணர்ந்தேன்; அகம் நெகிழ்ந்தேன். ஆம், அருண், கிள்ளான் அவர்களின் படைப்பில் உருவான ‘மலேசியப் பணத்தில் தமிழ் எழுத்துகள்’ என்ற வரலாற்றுக் கட்டுரையை படித்து சிந்தித்தேன்.
தொடக்கக்கால மலேசியா, அதாவது மலாயாவில் பல்லின மக்களின் ஒற்றுமையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் தமிழ், சீனம், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அச்சிட்ட பணத்தாட்கள் புழக்கத்தில் உள்ளதை இந்த கட்டுரை வழி அருண் அவர்கள் நன்றாக தெளிவிக்கின்றார்.
1935-ஆம் ஆண்டிலிருந்து 1938-ஆம் ஆண்டு வரை சுங்கை பூலோ தொழுநோயாளிகள் மட்டுமே பயன்படுத்த பணநோட்டுகள் வெளியிடப்பட்டிருக்கும் வியப்பான செய்தியும் இக்கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கின்றது.

தமிழ் மொழி இந்திய, இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் நாணயங்களில் உரிமையாய் குடிக்கொண்டிருந்தாலும்; உண்மையான ஆசியா (Truly Asia) என்று மார்தட்டும் மலேசியர்களின் நாணயங்களில் தற்பொழுது தமிழ் எழுத்துக்கள் பொறிக்காததை நம் மண்டையைத் தட்டாமல் தட்டிச் சுட்டிக்காட்டியதற்கு அருணுக்கும் அவர் தம் கட்டுரைக்கும் மற்றும் மக்களின் விழிபுணர்வுக்கு பாடுப்படும் செம்பருத்திக்கும் தலைவணங்குகிறேன்; வாழ்த்துகிறேன்!



