புதன், 4 மார்ச், 2009

இருவர் 2 – தமிழ் மேடை நாடகம்


பல மாதங்களாக காத்திருந்த இந்த தமிழ் மேடை நாடகத்தை காண முதல் காட்சிக்கு பசியையும் பொருட்படுத்தாமல் அலுவல் முடிந்ததும் என் நண்பர்களுடன் நேற்றிரவு (03/03/2009) இஸ்தானா புடாயாவிற்கு (Istana Budaya) சிட்டுக் குருவியாய் பறந்தேன். இரவு 8.31-க்கு தொடங்கிய நாடகத்தை, கடுமையான வாகன நெரிசலின் காரணமாக சற்று தாமதமாக ஏறக்குறைய இரவு 8.45-லிருந்துதான் பார்க்க நேர்ந்தது. முப்பது வெள்ளி நுழைச்சீட்டில் முப்புற இருக்கையில் தெளிவாக காட்சிகளைக் காணும்படி அமைந்த அமர்வு மகிழ்ச்சி.


2004-ஆம் ஆண்டு அறங்கேறிய இருவர், மலேசியாவிலும் தமிழகத்திலும் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட வெற்றிப் படைப்பு. மலேசிய நாட்டில் முதல் முறையாக இருவர்களை மட்டுமே தாங்கிய மேடை நாடகம் என்று மலேசிய சாதனை புத்தகத்தில் (Malaysia Book of Records) இடம்பெற்று சாதனை படைத்தது இந்த ‘இருவர்’.

இந்த சாதனைகளுக்கு ஆதாரமான இந்த நூற்றாண்டின் மலேசிய தமிழர்களுக்கு கிடைத்த ஒரு புதையல் இயக்குனர் எஸ். டி. பாலா; அவர்களின் மற்றொரு சிறந்த படைப்புதான் இந்த ‘இருவர் 2’ தமிழ் மேடை நாடகம். இது 2009-ஆம் ஆண்டின் இவரின் முதல் படைப்பாக மலர்ந்தாலும், தமிழ் மேடை நாடகங்களில் இது இவரின் 20-வது படைப்பு.


மலேசிய திருநாட்டு தமிழ் மேடை நாடகத்தின் அழிவை உயிர்பித்த இந்த சாதாரண மனிதனின் சாதனை பல. எல்லாம் மேடை நாடகத்தினாலேயே தேடி வந்தது. தமிழகத்தையே பேச வைத்த இவரின் இருவர், இயக்குனர் சிகரம் பாலசந்தரையே மனதார பாராட்ட வைத்ததுதான் குறிப்பிடத்தக்கது.

ஒரு குடும்பத் தலைவனுக்கும் குடும்பத் தலைவிக்கும் ஏற்படும் கருத்துவேறுபாட்டின் விளைவுகளை மையமாக வைத்து நகர்த்திய கதை, இருவர் 2. சுமார் இரண்டு மணி நேரங்கள் தோய்வில்லாமல் நகர்ந்த இந்த நாடகம் என் பசியையும் மறக்கவைத்தது. மிகவும் சிறப்பாக இரசிக்கும்படியாக இந்த நாடகம் அமைந்தற்கு கூடியிருந்த நாற்பது இரசிகர்களின் கைத்தட்டலே சாட்சி. அதைவிட, இரசிகர்களாகிய நாங்கள் அனைவரும் இறுதிவரை கவனச்சிதறல் இல்லாமல் அரங்கிலேயே கட்டுண்டு கிடந்தது மற்றுமொரு சாட்சி.

இந்த தரமான படைப்புக்கு எஸ். டி. பாலாவிற்கும் அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி; வாழ்த்துக்கள்! குறிப்பாக இந்த மேடைநாடகத்தின் கதாபாத்திரங்களுக்கு உயிர்க்கொடுத்து வாழ்ந்து காட்டிய, வாழ்ந்துக் கொண்டிருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!


http://www.nst.com.my/Current_News/NST/Monday/Features/20090301191957/Article/indexF_html

http://kanaigal.blogspot.com/2009/02/11_19.html

திங்கள், 23 பிப்ரவரி, 2009

வாழ்த்துக்கள் - ஏ.ஆர். ரஹ்மான்

ஸ்லம்டாக் மில்லியனர் (Slumdog Millionaire) படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன; சிறந்த இசைக்காகவும் (Original Score), சிறந்த பாடலுக்காகவும் (Original Song) விருது அளிக்கப்பட்டுள்ளன. வாழ்த்துக்கள்!


படம்-தினமலர்: நன்றி.

வியாழன், 12 பிப்ரவரி, 2009

வெற்றி வேல் முருகா!

தைப்பூசம் – சுங்கைப்பட்டாணி

8/2/2009, காலை 11 மணிக்கு சுங்கைப்பட்டாணியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு குடும்பத்துடன் சென்றேன். வாகனத்தை ஜாலான் செகெராட் (Jalan Sekerat) காந்தி நினைவு மண்டப வளாகத்தில் நிறுத்தி விட்டு, ஏறக்குறைய 500 மீட்டர் கோயிலை நோக்கி நடந்தோம். நடக்கும் வழியெல்லாம் இடதும் வலதும் தண்ணீர் பந்தல்கள். கோயிலை நெருங்க நெருங்க கூட்ட நெரிசல் அதிகரித்தது. அப்பா அர்ச்சனை சீட்டை வாங்கி வந்ததும், நாங்கள் எல்லோரும் கோயிலின் இராஜகோபுரத்தின் நுழைவாயில் வழியே உள்ளே சென்று சுப்பிரமணியரை தரிசித்தோம்.


கோயில் கற்பகிரகத்தில் மூலவருக்கு பக்தர்களின் நேர்த்திகடனான பாலாபிஷேகம் மிகவும் சிறப்பாகவே நடந்தேறிய வண்ணம் இருந்தது. பக்தர்கள் வரிசை வரிசையாக பால்குடம் ஏந்தி வந்துக்கொண்டிருந்தனர். மறுபுறம் உற்சவருக்கு அர்சனைகள் குவிந்த வண்ணம் இருந்தது. இந்த இடம் குறுகலாக இருந்தப்படியால் மக்கள் கூட்டத்தால் நெரிசலாக்கப்பட்டது. இருப்பினும் நாங்கள் கூட்டத்தோடு கூட்டமாக குடும்பத்தோடு நின்று ஒருவகையில் அர்சனை பிரசாதத்தை பெற்றுக்கொண்டோம்.


பிறகு, கோயிலின் ஒரு ஓரமாக நாங்கள் நின்று கொண்டு வெளியே சுற்றிவரும் காவடிகளை இரசித்துக் கொண்டிருந்தோம். முன்பைபோல இப்பொழுது மயில் இறகால் அலங்கரிக்கப்பட்ட காவடிகள் மிக குறைவு. சிறுவயதில் இந்த காவடிகளை பார்ப்பதற்காகவே தைப்பூசத் திருவிழாவின் வரவுக்காக காத்திருந்ததை நினைத்துக்கொண்டேன். முன்பைவிட இப்பொழுது காவடிகளும் மக்கள் கூட்டமும் அதிகரித்தே காணப்படுகிறது. ஏறக்குறைய 250,000 பேர் ஒன்று கூடும் ஒரு நிகழ்ச்சியாக இந்த சுங்கைப்பட்டாணி தைப்பூசம் விளங்குகிறது.



கடவுள் படத்தோடு அலங்கரிக்கப்பட்ட பல அழகிய காவடிகளை இன்னும் பக்தர்கள் சுங்கைப்பாட்டாணி முருகனுக்கு எடுக்கிறார்கள். பினாங்கு போல இங்கிலாந்து காற்பந்து குழுக்கான காவடிகளையெல்லாம் சுங்கைப்பட்டாணி பக்தர்கள் எடுக்காமலிருந்ததற்கு நன்றி.


இன்னொரு சிறப்பு அங்கம், காவடிகளுக்கு இசையமைப்பு. முன்பு அதிகமாக முழங்கப்பட்ட தண்டோராக்கள் இந்த வருட தைப்பூசத்திற்கு குறைந்தே காணப்பட்டது. அதற்கு பதிலாக அழகான சீருடை அணிவகுப்பில் உறுமி மேளங்கள் இசைக்கப்பட்டன; பாராட்டுகள். இன்னும் சில வருடங்களில் இந்த உறுமி மேளம் மட்டுமே தைப்பூசத்திருவிழாவிற்கு காவடிகளுக்காக இசைக்கப்படும் ஒரு முக்கிய இசைக்கருவியாக அமைந்துவிடும் என நான் நம்பிக்கைக் கொள்கிறேன்; வாழ்த்துக்கள்!








மதியம் மணி 12.30, வெயில் அதிகமாக இருந்ததால் என் குடும்பத்தாரை கோயிலிலேயே இருக்கச் சொல்லி விட்டு நான் மட்டும் கோயில் நிர்வாகத்தால் கோயில் திருமண மண்டபத்தில் வழங்கப்படும் அன்னதானத்தை பெறச் சென்றேன். நீண்ட வருசையில் நின்று இரு அன்ன பொட்டலங்களை வாங்கிக்கொண்டு மீண்டும் கோயிலின் அருகே வந்து குடும்பத்தை அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன். செல்லும் வழியில் அனைத்து தண்ணீர் பந்தல்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த காட்சிகளை பார்த்து மிகவும் மகிழ்ச்சியுற்றேன். முருக தரிசனத்தின் அகமகிழ்வோடு அனைவரும் வீடு வந்தடைந்தோம்.

திங்கள், 2 பிப்ரவரி, 2009

அஞ்சலி - நாகேஷ்


31 January, 2009 – தமிழ்த்திரையுலகின் பழம்பெரும் மன்னன் நாகேஷ் இயற்கை எய்தினார். அவரின் பிரிவு மனதை உலுக்கினாலும் அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் மனத்திரையில் ஓடிக்கொண்டு இருப்பது, கலங்கிய மனதை ஆதரிக்கிறது. என்னுள் அவர் வாழ்வதற்கு இதுவே சாட்சி!

ஈடு இணையற்ற கலைஞனே நாகேஷ், உமக்கு என் அஞ்சலி.


புதன், 14 ஜனவரி, 2009

பொங்கல் வாழ்த்துக்கள்!

பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!


இந்த இன்ப கூச்சல் தைப்பொங்கலில் மட்டுமல்ல, சிறு வயதில் ஒவ்வொரு முறையும் மதிய உணவுக்கு அம்மா சோற்றை பொங்க வைப்பதை பார்த்த போதெல்லாம் நான் துதித்தது இந்த தாரக மந்திரத்தையே.

அன்று எனக்கு தினம் தினம் பொங்கல் திருவிழா. இன்று அதை நினைக்கும் பொழுது, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வெளியீட்ட சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் ‘வாழ்வே தவம்’ என்ற புத்தகத்திலிருந்து ‘இன்று நாம் புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற கட்டுரை நினைவிற்கு வருகிறது.

அந்த கட்டுரையிலிருந்து சில வரிகள் பின்வருமாறு:

...நாட்கள் எப்படித் தன்னை தினம் தினம் புதுப்பித்துக் கொள்கின்றனவோ, வருடம் எப்படி தன்னை வருடா வருடம் பிறப்பித்துக்கொள்கின்றதோ, நாமும் தினம் தினம் இன்று நாம் புதிதாய்ப் பிறந்தோம் என்ற பாரதியார் உற்சாகத்தில் நம்மை நாம் புதுபித்துக்கொண்டால் இந்த வாழ்க்கை தினம் தினம் திருவிழாதான்.

அன்று என் பாலிய பருவத்தில் அர்தமின்றி தினம் தினம் கொண்டாடிய திருவிழாவின் மகத்துவத்தை இன்று இளைய பருவத்தில் அர்த்தத்துடன் உணர்ந்துக் கொண்டேன்.

பொங்கல் வாழ்த்துக்கள்!

வெள்ளி, 9 ஜனவரி, 2009

ஜனவரி, வருடத்தின் ஆரம்பமா இறுதியா?

இந்த கேள்விகளுக்கு மார்க் சில்வர் (Marc Silver) பின்வரும் தன் வலைபதிவில் பதிலளித்திருக்கின்றார். http://ngm.typepad.com/pop_omnivore/2009/01/how-january-wen.html.

ஜனவரி (January), ஜானுஸ் (Janus) என்ற இருதலைகள் கொண்ட ரோமன் கடவுளின் பெயரிலிருந்து வந்ததாகும். ஆரம்பமும் இறுதியையும் பிரதிபலிக்கும் கடவுள், ஜானுஸ் (கீழ்கண்ட படத்தை பார்க்கவும்). ரோமானிய காலத்தில் ஜனவரி வருடத்தின் 11-வது மாதமாகவும் மார்ச் (March) வருடத்தின் முதல் மாதமாகவும் இருந்திருக்கின்றது. மார்ச் மாதத்தில்தான் ரோமானியர்கள் பயிர்களை விளைவித்து விட்டு போருக்கு செல்வார்களாம். போருக்குரிய கடவுளான மாஸ்-லிருந்து (Mars) மார்ச் மாதம் பெயர் பெற்றிருக்கிறது.


சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆகஸ்தஸ் சீசர் (Augustus Caesar) காலத்தில் ரோமானியர்கள் நாட்டின் அரசியல் அமைப்பை போர்காலத்தில், அதாவது வழக்கமான மார்ச் மாதத்தில் நிர்ணயிப்பதைவிட அதற்கு இரண்டு மாதங்கள் முன்பே அரசை நிர்ணயிப்பது என்று தீர்மானித்திருக்கின்றனர். இந்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே ரோமானியர்கள் தங்கள் அரசமைப்பை ஜனவரி மாதத்தில் அமைத்து ஜனவரியே வருடத்தின் முதல் மாதமாகவும் வழக்கத்திற்கு கொண்டு வந்திருக்கின்றனர்.

இதே மாதிரிதான் அமெரிக்காவிலும் மார்ச் மாதத்தில் அதிபருக்கான பதவி பிரமாணம் ஏற்கும் சடங்கு வழக்கத்தில் இருந்தது. பிறகு, அமெரிக்க அரசியல் சட்டம் திருத்தப்பட்டு, 1933-ல் அமெரிக்க அதிபராக பிரங்கிலின் டிலானோ ரோஸ்வெல்ட்-தான் (Franklin Delano Roosevelt) ஜனவரி மாதத்தில் அமெரிக்க அதிபராக பொருப்பேற்ற முதல் நபராவார்.

செவ்வாய், 6 ஜனவரி, 2009

சம்பளம் - விளக்கம்

நேற்றுதான் (5/1/2009) கடந்த மாத (டிசம்பர்) சம்பளச் சீட்டு (Pay Slip) எனக்கு கிடைக்கப்பெற்றேன். கிடைத்ததும் அதை என் அலுவலக மேசைமீது இருந்த ஒரு புத்தகத்தின் இடுக்கில் வைத்தேன். இன்று அந்த சம்பளச் சீட்டை எடுக்கையில் அந்த புத்தகத்திலிருந்த சில பக்கங்கள் எதேர்ச்சையாகத் திரும்பி கீழ்கண்ட குறிப்பை மீண்டும் ஞாபகப்படுத்தியது.

தமிழில் அரிசிக்கு (நெல்) சம்பா என்று ஒரு பெயர் உண்டு. சீரகச் சம்பா என்று ஒருவகை அரிசியின் பெயர் கேள்விப் பட்டிருக்கலாம். இப்படி நெல் தான் உழைப்பவருக்கு, வேலை செய்பவருக்குக் கூலியாகத் தரப்பட்டது. அளம் என்ற சொல் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தைக் குறிக்கும். உப்பு+அளம்=உப்பளம். அவரவர்க்கான கூலிக்கான நெல்லைக் குவியல் குவியலாகக் குவித்து வைக்கும்போது அந்தப் பகுதி சம்பா+அளம் என்று சுட்டப்படும். அது உங்கள் சம்பா அளம். இது உங்கள் சம்பா அளம் என்று நெற்குவியலைச் சுட்டியதால் சம்பளம் என்ற சொல் பிறந்திருக்க வேண்டும்.

'சொன்னார்கள் சொன்னார்கள் பாகம்-1' என்ற புத்தகத்திலிருந்து, 165-வது பக்கத்தில் சுகி.சிவம் அவர்களால் குறிப்பிடப்பட்டது.