வியாழன், 12 பிப்ரவரி, 2009

வெற்றி வேல் முருகா!

தைப்பூசம் – சுங்கைப்பட்டாணி

8/2/2009, காலை 11 மணிக்கு சுங்கைப்பட்டாணியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு குடும்பத்துடன் சென்றேன். வாகனத்தை ஜாலான் செகெராட் (Jalan Sekerat) காந்தி நினைவு மண்டப வளாகத்தில் நிறுத்தி விட்டு, ஏறக்குறைய 500 மீட்டர் கோயிலை நோக்கி நடந்தோம். நடக்கும் வழியெல்லாம் இடதும் வலதும் தண்ணீர் பந்தல்கள். கோயிலை நெருங்க நெருங்க கூட்ட நெரிசல் அதிகரித்தது. அப்பா அர்ச்சனை சீட்டை வாங்கி வந்ததும், நாங்கள் எல்லோரும் கோயிலின் இராஜகோபுரத்தின் நுழைவாயில் வழியே உள்ளே சென்று சுப்பிரமணியரை தரிசித்தோம்.


கோயில் கற்பகிரகத்தில் மூலவருக்கு பக்தர்களின் நேர்த்திகடனான பாலாபிஷேகம் மிகவும் சிறப்பாகவே நடந்தேறிய வண்ணம் இருந்தது. பக்தர்கள் வரிசை வரிசையாக பால்குடம் ஏந்தி வந்துக்கொண்டிருந்தனர். மறுபுறம் உற்சவருக்கு அர்சனைகள் குவிந்த வண்ணம் இருந்தது. இந்த இடம் குறுகலாக இருந்தப்படியால் மக்கள் கூட்டத்தால் நெரிசலாக்கப்பட்டது. இருப்பினும் நாங்கள் கூட்டத்தோடு கூட்டமாக குடும்பத்தோடு நின்று ஒருவகையில் அர்சனை பிரசாதத்தை பெற்றுக்கொண்டோம்.


பிறகு, கோயிலின் ஒரு ஓரமாக நாங்கள் நின்று கொண்டு வெளியே சுற்றிவரும் காவடிகளை இரசித்துக் கொண்டிருந்தோம். முன்பைபோல இப்பொழுது மயில் இறகால் அலங்கரிக்கப்பட்ட காவடிகள் மிக குறைவு. சிறுவயதில் இந்த காவடிகளை பார்ப்பதற்காகவே தைப்பூசத் திருவிழாவின் வரவுக்காக காத்திருந்ததை நினைத்துக்கொண்டேன். முன்பைவிட இப்பொழுது காவடிகளும் மக்கள் கூட்டமும் அதிகரித்தே காணப்படுகிறது. ஏறக்குறைய 250,000 பேர் ஒன்று கூடும் ஒரு நிகழ்ச்சியாக இந்த சுங்கைப்பட்டாணி தைப்பூசம் விளங்குகிறது.கடவுள் படத்தோடு அலங்கரிக்கப்பட்ட பல அழகிய காவடிகளை இன்னும் பக்தர்கள் சுங்கைப்பாட்டாணி முருகனுக்கு எடுக்கிறார்கள். பினாங்கு போல இங்கிலாந்து காற்பந்து குழுக்கான காவடிகளையெல்லாம் சுங்கைப்பட்டாணி பக்தர்கள் எடுக்காமலிருந்ததற்கு நன்றி.


இன்னொரு சிறப்பு அங்கம், காவடிகளுக்கு இசையமைப்பு. முன்பு அதிகமாக முழங்கப்பட்ட தண்டோராக்கள் இந்த வருட தைப்பூசத்திற்கு குறைந்தே காணப்பட்டது. அதற்கு பதிலாக அழகான சீருடை அணிவகுப்பில் உறுமி மேளங்கள் இசைக்கப்பட்டன; பாராட்டுகள். இன்னும் சில வருடங்களில் இந்த உறுமி மேளம் மட்டுமே தைப்பூசத்திருவிழாவிற்கு காவடிகளுக்காக இசைக்கப்படும் ஒரு முக்கிய இசைக்கருவியாக அமைந்துவிடும் என நான் நம்பிக்கைக் கொள்கிறேன்; வாழ்த்துக்கள்!
மதியம் மணி 12.30, வெயில் அதிகமாக இருந்ததால் என் குடும்பத்தாரை கோயிலிலேயே இருக்கச் சொல்லி விட்டு நான் மட்டும் கோயில் நிர்வாகத்தால் கோயில் திருமண மண்டபத்தில் வழங்கப்படும் அன்னதானத்தை பெறச் சென்றேன். நீண்ட வருசையில் நின்று இரு அன்ன பொட்டலங்களை வாங்கிக்கொண்டு மீண்டும் கோயிலின் அருகே வந்து குடும்பத்தை அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன். செல்லும் வழியில் அனைத்து தண்ணீர் பந்தல்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த காட்சிகளை பார்த்து மிகவும் மகிழ்ச்சியுற்றேன். முருக தரிசனத்தின் அகமகிழ்வோடு அனைவரும் வீடு வந்தடைந்தோம்.

8 கருத்துகள்:

சரிதா சொன்னது…

:-)

சரிதா சொன்னது…

Good Review :-)

மு.வேலன் சொன்னது…

[இனியவள் புனிதா] நன்றி.

Sathis Kumar சொன்னது…

//பினாங்கு போல இங்கிலாந்து காற்பந்து குழுக்கான காவடிகளையெல்லாம் சுங்கைப்பட்டாணி பக்தர்கள் எடுக்காமலிருந்ததற்கு நன்றி.//

கூடிய விரவில் இங்கிலாந்து பிரிமியர் லீக் சுங்கை பட்டாணி தைப்பூசத்தை ஆக்கிரமிக்க எனது நல்லாசிகள்..

Logan சொன்னது…

முருகனின் மலேசியா கோவிலை பற்றி அறிந்து கொண்டேன் நன்றி

குமரன் மாரிமுத்து சொன்னது…

//ஏறக்குறைய 250,000 பேர் ஒன்று கூடும் ஒரு நிகழ்ச்சியாக இந்த சுங்கைப்பட்டாணி தைப்பூசம் விளங்குகிறது//

மெய்யாலுமா... 25,000ம் வருகையாளர்களா? 250,000 வருகையாளர்களா?

//அதற்கு பதிலாக அழகான சீருடை அணிவகுப்பில் உறுமி மேளங்கள் இசைக்கப்பட்டன//

உறுமி மேளம் இசைக்கும் நமது இளைஞர்கள் சீருடைகளில் அழகாகத்தான் காட்சியளிக்கின்றனர். ஆனால், சற்றே மேல் நோக்கி அவர்களின் மண்டையைப் பாருங்கள்.. ஏதோ எலிகள் கோளம் போட்டிருப்பதைப் போல் இல்லை...

பெயரில்லா சொன்னது…

vanakam,
nalla pattivu, sungai petaniyin thaipusathai ulagam ariya oru kalam

A N A N T H E N சொன்னது…

//முன்பைபோல இப்பொழுது மயில் இறகால் அலங்கரிக்கப்பட்ட காவடிகள் மிக குறைவு.//

காவடிக்கும் பரிணாமம் தெவைப்படுதோ என்னவோ? ... பால்காவடியில் ஆரம்பித்த காவடி... இப்போது போட்டி அலங்கார காவடியாக மட்டுமே பார்க்கப் படுகிறது.//முன்பைவிட இப்பொழுது காவடிகளும் மக்கள் கூட்டமும் அதிகரித்தே காணப்படுகிறது.//

- அதுவும் இந்த வாட்டி பூசம் வார இறுதியில் வந்ததனால வேடிக்கையாளர் கூட்டமும் அதிகம்//பினாங்கு போல இங்கிலாந்து காற்பந்து குழுக்கான காவடிகளையெல்லாம் சுங்கைப்பட்டாணி பக்தர்கள் எடுக்காமலிருந்ததற்கு நன்றி.//

சதீசு சொன்னதையே வழிமொழிகிறேன்போட்டோக்கள் தெளிவாகவும் நயத்தோடும் உள்ளன.