சனி, 6 டிசம்பர், 2008

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிற கதை...

இன்று (6/12/2008) காலை 7-க்குதான் நானும் என் பாலிய நண்பர் யுமன்+யுனிவர்ஸின் பதிவருமான சு.சிவநேசனும் கோலாலம்பூரிலிருந்து எங்கள் சொந்த ஊர் சுங்கைப்பட்டாணிக்கு வந்தடைந்தோம். அவரின் வாகனத்திலேயே, கோலாலம்பூரிலிருந்து ஜூரு (Juru) வரை, பழைய சாலை வழியே கட்டணமின்றி பயணத்தை மேற்கொண்டு பிறகு சுங்கை டூவாவிலிருந்து (Sungai Dua) சுங்கைப்பட்டாணி வரை கட்டண நெடுஞ்சாலையை பயண்படுத்தி வீடு வந்தடைந்தோம். வரும் வழியில் வாழ்க்கைப் பயணத்தின் பதிவருமான அருமை நண்பர் திரு. விக்கியை சந்திக்கும் ஒரு வாய்பு கிட்டியது. ஏறக்குறைய முற்பகல் இரண்டு மணியிலிருந்து (2am) மலேசிய தமிழ் பதிவாளர்களைப் பற்றியும் அவர்களின் பதிவுகளைப் பற்றியும் சிந்தித்துப்பார்த்து கோபேங்கிலிருந்து (Gopeng) மூன்றரை மணிக்கு (3.30am) திரு. விக்கியிடம் விடைப்பெற்றுக் கொண்டோம்.

கலைப்பான பயணத்தை மனநிறைவான சந்திப்பு ஆட்கொண்டிருந்தாலும், வீட்டை அடைந்ததும் முதலில் ஒரு ‘குட்டி தூக்கம்’ என்னவோ தேவையாகவே இருந்தது. காலை 10 மணிக்கு எழுந்து, காலை கடன்களை முடித்து விட்டு இன்றைய மக்கள் ஓசையைப் புரட்டிப் பார்த்தேன். எனது பாணியில் வழக்கம் போல ‘அதே குப்பை’-கள் தான். பெரும்பான்மையான மலேசிய தமிழர்களின் பொழுது போகுவதற்கும் வாய் அசைப்போடுவதற்கும் தற்சமயம் பேச கிடைத்த தகவல், நாட்டில் ஒரே பள்ளி முறையைக் கொண்டு வர வேண்டும் என துடிக்கும் ஜெர்லுன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முக்ரிஸ் மகாதீரின் கூற்று!

இந்த கூற்றைப் பற்றி இன்றைய மக்கள் ஓசையில், நம் நாட்டு (மலேசிய நாட்டைதான் சொல்கிறேன்) சமுதாய இயக்கங்களும் சமுதாய உணர்வாளர்களும் நன்றாகவே எழுத்தின் மூலம் தங்கள் ஆத்திரத்தை-அதிருப்தியை-ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பது, குப்பைகளுக்கிடையிலிருந்து கிடைத்த மாணிக்கங்களாகவே நான் கருதுகிறேன்! இந்த மாணிக்கங்களில், கெடா மாநில மலாயா தமிழ்ப்பள்ளிகளின் தலைவர் திரு. சேம் சுப்பிரமணியம் அவர்களின் ‘முக்ரிஸ் அப்படி பேசியதற்கு யார் காரணம்?’ என்ற கட்டுரை என் மனதை சற்று பாரமாக்கியது; சிந்தனைச் செய்ய தூண்டியது; இந்த பதிவையும் பதிய வைத்தது. ஐயா அவர்களின் கருத்து ஒரு அறுச்சுவை விருந்து; விலைமதிப்பில்லா மாணிக்க கொத்து. ஐயாவின் கருத்தைத் தொகுத்த கு.அன்பரசன் அவர்களுக்கும் அதை பிரசுரித்த மக்கள் ஓசைக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!

சுங்கைப்பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் என் ஐந்தாம் ஆண்டு வகுப்பு ஆசிரியராகவும் மனிதனும் சுற்றுச்சூழலும் சொல்லிக் கொடுத்த பாட ஆசிரியராகவும் எனக்கு அவர் கிடைக்கப்பெற்றதமைக்காக இவ்வளவு தூக்கி வைத்து திரு. சேம் சுப்பிரமணியம் அவர்களை நான் புகழ்ந்து கொண்டிருக்கவில்லை. இந்நாட்டின் பொறுப்புள்ள பல தமிழர்களின் உண்மையான பொறுப்பில்லாச் செயல்களைச் சுட்டிக்காட்டி, அதன் பின்விளைவுகளையும் இரத்தினச் சுருக்கமாகக் கூறியிருக்கும் அவரின் சமுதாயச் சிந்தனையைத்தான் பாராட்டத்தக்கது என்று நான் மீண்டும் கூறிக்கொள்கிறேன்.

ஐயா அவர்கள் அப்படி என்னதான் சிந்திக்க தூண்டுகிறார்?

மழைக்குக்கூட தங்களும் ஒதுங்காமல் தங்கள் பிள்ளைகளையும் தமிழ்ப்பள்ளி பக்கம் ஒதுங்க விடாமல் இருக்கின்ற பல கறுப்பு துரைகள், இன்று தாய்மொழி பள்ளிக் கூடங்கள் மூடப்பட வேண்டாம் என்று அறிக்கை விடும் செயலை ‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத’ கதையாக வர்ணித்திருப்பது அருமை!

முதலில் அவர் எழுப்பிய கேள்வியைப் பார்ப்போம். முக்ரிஸ் அப்படி பேசியதற்கு யார் காரணம்? இந்த கேள்வியை கேட்ட அவரே இந்த கேள்விக்கு பதில்களையும் அளிக்கிறார்.

காரணம் 1:
பெரும்பாலான நமது சமுதாய தலைவர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பாமல் இருப்பது.

காரணம் 2:
பெரும்பாலான தலைமையாசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பாமல் இருப்பது.

காரணம் 3:
பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பாமல் இருப்பது.

மேற்குறிப்பிட்ட முக்காரணங்களுமேதான் முக்ரிஸ் போன்ற அரசியல் வியாதியர்களுக்கு நமது சமுதாய உரிமைகளை உரசிப் பார்க்க வழிவகுக்கிறது என்று உணர்த்துகிறார்.

இப்படி கேள்வியைத் தொடுத்து பதில்களையும் சரமாக கொடுத்த திரு. சேம் சுப்பிரமணியம், இந்த பிரச்சனைக்கு தீர்வையும் முழு நிவாரணத்தையும் கூட அளிக்க மறக்கவில்லை. வருகின்ற 2009ஆம் ஆண்டிலுருந்து நமது தலைவர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கே அனுப்ப வேண்டும் என்பதை ஒரு சவாலாகவே ஏற்கச் சொல்கிறார்.

அப்படி அனுப்புவதால் 600க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளை மலேசியாவில் உருவாக்கலாம் என்ற நம்பிக்கையையும் முன்வைத்து அரசாங்கத்திடமிருந்து பல சலுகைகளையும் பெற முடியும்மென நமக்கு உணர்த்துகிறார்.

இந்த வேளையில், உங்களுடன் ஒரு உதாரண மனிதரை பற்றி பகிர்ந்துகொள்வதில் கடமைப் பட்டுள்ளேன். அவர் வேறு யாருமல்ல என்னை வளர்த்து ஆளாக்கிய என் தந்தை திரு. முனியாண்டி அவர்கள்தான். இப்பொழுது பதவி ஓய்வில் இருக்கும் ஒரு முன்னாள் தமிழ்ப்பள்ளி ஆசிரியர். அவர் படித்தது சுங்கைப்பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளி. அவரின் பிள்ளைகளாகிய எங்கள் ஐவரையும் (என்னையும் என் நான்கு அக்காள்களையும்) படிக்க வைத்தது அதே சுங்கைப்பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளியிலேயேதான். இந்த அரியச் செயல் தமிழினத்திற்கு ஒரு முன் உதாரணம்.

12 கருத்துகள்:

Sathis Kumar சொன்னது…

நானும் அக்கட்டுரையைப் படித்தேன். நல்ல வழிகாட்டிகளை உங்கள் வாழ்க்கையில் பெற்றிருக்கிறீர்கள்.
மிக்க மகிழ்ச்சி.

பெயரில்லா சொன்னது…

முக்ரிசின் கருத்தை நம் சமுதாயம் ஒன்றித்துக் கண்டிக்கவேண்டும்.

அக்கருத்தை எதிர்ப்பவர்கள் எவ்வாறானவர்கள் என்று ஆராய்ந்து அதன்வழி நமக்குள் பிளவை உருவாக்குவது நன்றன்று.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//அவர் படித்தது சுங்கைப்பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளி. அவரின் பிள்ளைகளாகிய எங்கள் ஐவரையும் (என்னையும் என் நான்கு அக்காள்களையும்) படிக்க வைத்தது அதே சுங்கைப்பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளியிலேயேதான்.//

இன்பத் தாக்கம் கொடுக்கும் மகிழ்ச்சியான செய்தி... அவருக்கு என் வணக்கங்கள்.

//மழைக்குக்கூட தங்களும் ஒதுங்காமல் தங்கள் பிள்ளைகளையும் தமிழ்ப்பள்ளி பக்கம் ஒதுங்க விடாமல் இருக்கின்ற பல கறுப்பு துரைகள்//

:))... நல்ல வேளையாக தமிழனுக்கு தோல் கருப்பாக இருக்கு... இல்லையென்றால் கெட்டது குடி...

மு.வேலன் சொன்னது…

[goooooood girl] நன்றி.

[சதீசு குமார்] மகிழ்ச்சி. நன்றி.

[அ நம்பி] //முக்ரிசின் கருத்தை நம் சமுதாயம் ஒன்றித்துக் கண்டிக்கவேண்டும்.//

இது மகிழ்ச்சியான செயல். ஆனால் சிறப்பான செயல் அல்ல. தலைமுறை தலைமுறையாக இதே மாதிரி தமிழன் எவ்வளவு நாளாக பேச போகிறான்? இதற்கு தீர்வைதான் திரு. சேம் சுப்பிரமணியம் கொடுத்திருக்கிறார். அவர் நமக்குள் பிளவை உருவாக்கவில்லை, விழிப்புணர்ச்சியைதான் உருவாக்க முயல்கிறார்.

[VIKNESHWARAN] உங்களின் வணக்கங்களை சேர்த்து விடுகிறேன். நன்றி. :)

பெயரில்லா சொன்னது…

//நாட்டில் ஒரே பள்ளி முறையக் கொண்டு வரவேண்டும் என்று ஜெர்லுன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முக்ரிஸ் கூறும் கருத்துக்கு வழிவிட்டது யார் என்ற கேள்வியை அவர் எழுப்பினார். - சேம் சுப்பிரமணியம் அவர்களின் அறிக்கையிலிருந்து//

யாரோ வழிவிட்டார்கள் என்பது பொருந்தாது.

இந்தப் பிரச்சினை புதியதன்று.

விடுதலைக்கு முன்பிருந்தே இக்கருத்தை நான் படித்து வருகிறேன்.

ROGER TAN: Taking politics out of education

http://www.nst.com.my/Current_News/NST/Sunday/Columns/2421560/Article/index_html

gP சொன்னது…

:)

பெயரில்லா சொன்னது…

நானும் இங்கே வந்ததுக்கு ஒரு ஸ்மைலி போட்டுக்கிறேன் :-)

து. பவனேஸ்வரி சொன்னது…

தமிழ்ப்பள்ளி பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை! 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்று பாரதியார் பாடிச்சென்றார்.

"என்று தீரும் இந்த
தமிழ்ப்பள்ளி தர்க்கம்"

என்று நாம் பாடவேண்டும் போல இருக்கிறது... திரு. சேம் சுப்பிரமணியத்தின் கருத்து வரவேற்கத்தக்கது. தமது 5 பிள்ளைகளையும் தமிழ்ப்பள்ளியில் சேர்த்த தமிழாசிரியரான உங்கள் தந்தைக்கு எனது வாழ்த்தும் வணக்கமும் உரித்தாகுக.

மு.வேலன் சொன்னது…

[து. பவனேஸ்வரி] உங்கள் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

//"என்று தீரும் இந்த
தமிழ்ப்பள்ளி தர்க்கம்"

என்று நாம் பாடவேண்டும் போல இருக்கிறது... //

இந்த கருவை வைத்து நீங்கள் ஒரு கவிதை புனைய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

Tamil Usi சொன்னது…

வணக்கம்.
தமிழ் பள்ளிகளை வைத்து அரசியல் நாடகம் போடுவதே இங்கு பலருக்கு வேலையாய் போய்விட்டது. எதை செய்ய வேண்டுமோ,அதை செய்வதற்கு யாரும் தயார் இல்லை. அறிக்கை விடுவதற்கும், கூச்சல் போடுவதற்கும் நூறு இருநூறு எஜமானர்கள்.

நான் ஒரு டாக்சி டிரைவர். எனது 32வது வயதில்(2007) STPM பரிட்சைக்கு தமிழ் மொழி பாடத்தை ஒரு தேர்வு பாடமாக எடுத்தேன். என்ன படிக்க வேண்டும் என்று தெரியவில்லை.... எங்கு reference book வாங்க வேண்டும் என்றும் தெரியவில்லை.......
ஆனால்.....
Sejarah,Pengajian Am,Pengajian Perniaagaan போன்ற மற்ற பாடத்திற்கு எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. SMC தவிர வேறு எங்கும் ஒழுங்கான தமிழ் வகுப்புக்கள் இல்லை....
பள்ளி செல்லாமல் SPM,STPM பரிட்ச்சைக்கு தமிழ் எடுக்கும் மாணவர்களின் நிலை அதோ கதிதான்.
தமிழ் படி........தமிழ் படி.... என்று கத்துவதற்குதான் இங்கு ஆள் உள்ளது.....
வழி காட்ட யாரும் கிடையாது....
உண்மையை சொல்லி பாருங்கள்..... யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்....
வேதனையுடன் நன்றி...

மு.வேலன் சொன்னது…

[Tamil Usi] உங்களையும் உங்கள் அருமையான கருத்தையும் வரவேற்கிறேன். நன்றி.

//தமிழ் படி........தமிழ் படி.... என்று கத்துவதற்குதான் இங்கு ஆள் உள்ளது.....
வழி காட்ட யாரும் கிடையாது....
உண்மையை சொல்லி பாருங்கள்..... யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்....
வேதனையுடன் நன்றி...//

உங்கள் வேதனை எனக்கு நன்றாக புரிகிறது. இது போல வேதனைகளை நம் அடுத்த சந்ததியினர் அனுபவிக்காமலிருப்பதற்கு சில வழிமுறைகளை பகிர்ந்துக்கொள்ளலாம். நன்றி.

Tamil Usi சொன்னது…

நன்பர் மு.வேலன் அவர்களுக்கு வணக்கம்.

அடுத்த தலைமுறையினர்கு நாம் குறைகளை விட்டு செல்வதை விட நிறைகளை விட்டு செல்வோம்.