வெள்ளி, 31 அக்டோபர், 2008

நெஞ்சு பொறுக்கு திலையே

இன்று 30/10/2008. செப்டம்பர்-அக்டோபர் 2008-ன் பயனீட்டாளர் குரல், பக்கம் ஆறில் பிரசுரிக்கப்பட்ட ‘வறுமையின் உச்சம்’ என் மனதை வறுத்தியதின் மிச்சம் இந்த பதிவு. ஆம், உண்ண உணவின்றி வாடும் ஹைட்டி (Haiti) மக்கள், களிமண் அடையை (Biscuit) சாப்பிடுகிறார்கள்.


75 விழுக்காடு மக்களின் ஒரு நாள் வருமானம் அமெரிக்க டாலர் இரண்டாம். 97 விழுக்காடு மக்களின் வீட்டில் மின்சார வசதி இல்லையாம். நான்கு பேரில் ஒருவருக்கு மட்டும்தான் படிக்க தெரியுமாம். 70 விழுக்காடு மக்களுக்கு வேலை இல்லா திண்டாட்டமாம். 25 விழுக்காடு ஹைட்டி மக்கள் 40 வயது ஆவதற்கு முன்பே இயற்கையை எய்துகிறார்களாம். ஹைட்டியில் 2 குவளை அரிசியின் விலை அமெரிக்க சென் (USD) 0.60-க்கு விற்கப்படுகிறதாம். சோளம், கோதுமை போன்றவற்றின் விலைகளும் மக்களால் வாங்க முடியாத அளவுக்கு ஏற்றத்தில் இருக்கிறதாம்; களிமண் அடை தவிர. அதன் விலையும் கூட உயர்கிறதாம்!

களிமண் அடை சாப்பிடுவது ஹைட்டி மக்களுக்கு ஒன்றும் புதியது அல்ல, ஆனால் களிமண் அடையையே அன்றாட உணவாக உட்கொண்டுவருவதுதான் வறுமை அவர்களுக்கு வகுத்த விதி.

இந்த களிமண் அடையை கர்ப்பிணிப் பெண்கள் பாரம்பரியமாக சுண்ணாம்பு சத்துக்காக (Calcium) உண்டு வந்திருக்கிறார்கள். களிமண்ணில் நீர், மார்ஜரின், உப்பு கலந்து பிசைந்து தட்டில் வெய்யிலில் நன்றாகக் காய வைத்து தயாரிக்கப்படுகிறது. களிமண்ணில் இருக்கும் ஒட்டுண்ணியும் அபாயகரமான நச்சுக்கிருமிகளும் கருவில் இருக்கும் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை தருவதாக ஆய்வு கூறுகிறது. ஆனால், கருவிலிருந்து வெளியே எட்டிப்பார்த்த 5 வயது கூட எட்டாத, களிமண் அடையை மரண எதிர்ப்பு சக்தியாக உட்கொள்ளும் குழந்தைகளில் 5-ல் ஒருவர் வயிற்றுப்போக்கினால் ஹைட்டியில் இறந்துபோகிறார்களாம்.

மகாகவி பாரதியார் பிறந்திருக்கும் முன்பே, பிறந்திருக்கும் வறுமையின் தாண்டவத்திற்கு இன்னும் வழி பிறக்கவில்லை. இருப்பினும், மகாகவி பிறந்து வளர்ந்து வறுமையின் வலியை அன்று கவிதையாய் பிரசவத்திருப்பது இன்றைய காலகட்டத்திலும் பொருந்துகிற குமறல்; வேண்டுதல்.

மகாகவியின் கவிகளில் சில...

1. ‘பாரத ஜனங்களின் தற்கால நிலைமை’ என்ற கவிதையின் 6-வது பத்தி:

நெஞ்சு பொறுக்கு திலையே – இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்கு திலையே;
கஞ்சி குடிப்பதற் கிலார் – அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே – நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின் றாரே – இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே.


2. ‘பாரத சமுதாயம்’ என்ற கவிதையின் 2-வது பத்தி:

இனியொரு விதிசெய் வோம்-அதை
எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக்குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம் – வாழ்க!

8 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அரசியலும் வறுமையும் எப்போதும் இணைந்தே இருப்பதுதான் ஹைத்தியின் நடைமுறை.

மக்கள் மண்ணைத் தின்றால் என்ன, மணலைத் தின்றால் என்ன? அரசியலாளர்களுக்குத் தங்கள் பிழைப்பே முக்கியம்.

பெயரில்லா சொன்னது…

ur comments was good ,my boy. valarga umathu muyarchi.

பெயரில்லா சொன்னது…

ur comments was good ,my boy. valarga umathu muyarchi.
from , prem vasi

பெயரில்லா சொன்னது…

oru makkal pirivin varumai nilaiyum madrum kasthangalayyum thulliyamaga koornthu alithamayku nanri.
ippadiku,
premvasi

மு.வேலன் சொன்னது…

மக்களை வைத்துதான் அரசியலை இயக்க முடியும். மக்களே இல்லையென்றால் அரசு எங்கே, அரசியலும் எங்கே?

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

இக்கட்டுரையை ஏற்கனவே திரு.சேவியர் தளத்தில் படித்திருக்கிறேன். வருத்தமான செய்தி. பொருள் வாங்க மூட்டை மூட்டையாக பணம் கொண்டு செல்கிறார்கள். பணம் குப்பை தொட்டிகளிலும் கிடைக்கும் அந்நாட்டில்.

பெயரில்லா சொன்னது…

அன்புள்ள வேலனுக்கு வணக்கம்.

ஏந்த இடத்திலும் உள்ள ஒரு பிரச்சனை - அரசியல் என்ற சாக்கடை!! எல்லா விதத்திலும் பாதிக்கப்படுவது பாமர மக்கள்தான்!

வறூமையைப் போக்குவதற்கு முக்கியமானக் கருவி கல்வி!!

Well bro...T tried to type in tamil font, but I think I need a little more practice.

Your article is very good and but quite sad at the same time.

'மக்கள் பிரச்சனை தீர ஒரு விடிவுக்காலம் சீக்கீரம் வர வேண்டும்'!!

மு.வேலன் சொன்னது…

அனைவரின் கருத்துக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்.