வியாழன், 16 அக்டோபர், 2008

எண்ணெய்யும், என்னையும்.

இன்று (15/10/2008) அலுவலகத்துக்கு எப்பொழுதும் போல இல்லாமல் சிறிது சீக்கிரமாகவே வந்துவிட்டேன், காலை 8.45-க்கு. வந்ததும் என் இருக்கைக்குக்கூட போகாமல், நேராக விருந்தினர் வரவேற்பரைக்குச் (Visitor’s Waiting Room) சென்று ‘The Star’ நாளிதழைப் படிக்க எடுத்தேன். முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் பொறிக்கப்பட்ட தலையங்கத்தைச் சற்று உற்றுக் கூர்ந்தேன்; ‘DOWN’- வீழ்ச்சி. ஆம், நேற்று (14/10/2008) அறிவிக்கப்பட்டதுபோல், இன்று எண்ணெய் விலை ‘down’-ஆகியிருக்கிறது. அதாவது மலேசிய சந்தையில் எரிப்பொருளின் விலை குறைக்கப்பட்டிருக்கின்றது.

ரோன்97 எண்ணெய் (Petrol RON97) ஒரு லிட்டருக்கு 15 சென் குறைக்கப்பட்டு மலேசியா ரிங்கிட் 2.30 என்ற புதிய விலையிலும், ரோன்92 எண்ணெய் (Petrol RON92) ஒரு லிட்டருக்கு 10 சென் குறைக்கப்பட்டு மலேசியா ரிங்கிட் 2.20 என்ற புதிய விலையிலும், டீசல் ஒரு லிட்டருக்கு 20 சென் குறைக்கப்பட்டு மலேசியா ரிங்கிட் 2.20 என்ற புதிய விலையிலும் விற்கப்படுகிறது. ஒரு பீப்பாய் (Barrel) கச்சா எண்ணெய் யுஎஸ்$147-லிருந்து யுஸ்$83.73-க்கு இறங்கியிருப்பதே இந்த புதிய விலையின் மாற்றத்திற்கு காரணம் எனதி மலேசியன் இன்சாய்டர் டாட் காம்’ (themalaysianinsider.com) தெரிவித்தது.

5/6/2008-யில், ரோன்97 எண்ணெய் (Petrol RON97) ஒரு லிட்டருக்கு மலேசியா ரிங்கிட் 1.92-யிலிருந்து மலேசியா ரிங்கிட் 2.70-க்கு வெற்றிகரமாக அரசாங்கத்தால் 41 விழுகாடு விலை ஏற்றம் செய்யப்பட்டது. இந்த விலை ஏற்றம் நேரடியாக எல்லா பொருள்களின் விலைகளையும் ஏறுமுகமாக்கியது. இது பெரும்பாலான மலேசிய வாழ் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்தது; பாதித்துக்கொண்டிருக்கின்றது, என்னையும் உட்பட. இதற்குதாஜாபன்னும் வகையில் ஒவ்வொரு கார்களின் வேகத் திரன்களுக்கு ஏற்றால் போல் வருடாந்திர ரொக்க வெகுமதியும் ‘cash rebate’ வழங்கப்படுகிறது.

பிறகு இடைக்காலத்தில், படிப்படியாக ரோன்97 எண்ணெய் (Petrol RON97) ஒரு லிட்டருக்கு மலேசியா ரிங்கிட் 2.55-ஆகவும் 2.45-ஆகவும் குறைக்கப்பட்டது; இது ஒரு வரவேற்கப்பட வேண்டிய செயலாகும். என்னதான் எண்ணெய் விலை குறைக்கப்பட்டாலும் சிறிதளவும் அத்தியாவசிய பொருள்களின் விலை ஏற்றம் குறைந்த பாடில்லை; மனதின் பாரமும் குறைந்த பாடில்லை.

இன்று
, மீண்டும் மூன்றாவது முறையாக எண்ணெய் விலை குறைப்பை நாளிதழில் படித்தேன். மீண்டுமொரு வரவேற்கத்தக்க செயலாக இருந்தாலும் இதைப் படித்த எனக்கு எந்த ஒர் எண்ணமோ, உணர்ச்சிகளோ மனதை ஆட்கொள்ளவில்லை. அதேபோல்தான் என்னோடு வேலை செய்யும் சக நண்பர்களுக்கும் இருந்திருக்குமோ என்னமோ? காலையிலிருந்து (8.50 காலை) இந்நேரம் வரை (6.58 மாலை) முன்பு உணர்ச்சிகளை வெளிப்படுத்திய மாதிரி இப்பொழுது, யாரும் இம்முறை மன குமறல்களைத் துளியளவும் வெளிப்படுத்தவில்லை; ஒருவருக்கொருவர் தங்களை கருத்து பரிமாற்றங்களிலும் ஈடுபடுத்திக்கொள்ளவில்லை.

ஏன்? ஊணர்ச்சியற்று விட்டோமா? இல்லை, என்னதான் எண்ணெய் விலை இறங்கினாலும் ஏறிய வாழ்வியல் செலவு (living cost) இறங்கவா போகிறது என்ற எண்ணமா? அல்லது அலட்சியமா? புலப்படாத உணர்ச்சி என்னை சூழ்ந்துக்கொண்டிருக்கும் வேளையிலே எழுதுவதை நிறுத்துகிறேன்.