வெள்ளி, 31 அக்டோபர், 2008

நெஞ்சு பொறுக்கு திலையே

இன்று 30/10/2008. செப்டம்பர்-அக்டோபர் 2008-ன் பயனீட்டாளர் குரல், பக்கம் ஆறில் பிரசுரிக்கப்பட்ட ‘வறுமையின் உச்சம்’ என் மனதை வறுத்தியதின் மிச்சம் இந்த பதிவு. ஆம், உண்ண உணவின்றி வாடும் ஹைட்டி (Haiti) மக்கள், களிமண் அடையை (Biscuit) சாப்பிடுகிறார்கள்.


75 விழுக்காடு மக்களின் ஒரு நாள் வருமானம் அமெரிக்க டாலர் இரண்டாம். 97 விழுக்காடு மக்களின் வீட்டில் மின்சார வசதி இல்லையாம். நான்கு பேரில் ஒருவருக்கு மட்டும்தான் படிக்க தெரியுமாம். 70 விழுக்காடு மக்களுக்கு வேலை இல்லா திண்டாட்டமாம். 25 விழுக்காடு ஹைட்டி மக்கள் 40 வயது ஆவதற்கு முன்பே இயற்கையை எய்துகிறார்களாம். ஹைட்டியில் 2 குவளை அரிசியின் விலை அமெரிக்க சென் (USD) 0.60-க்கு விற்கப்படுகிறதாம். சோளம், கோதுமை போன்றவற்றின் விலைகளும் மக்களால் வாங்க முடியாத அளவுக்கு ஏற்றத்தில் இருக்கிறதாம்; களிமண் அடை தவிர. அதன் விலையும் கூட உயர்கிறதாம்!

களிமண் அடை சாப்பிடுவது ஹைட்டி மக்களுக்கு ஒன்றும் புதியது அல்ல, ஆனால் களிமண் அடையையே அன்றாட உணவாக உட்கொண்டுவருவதுதான் வறுமை அவர்களுக்கு வகுத்த விதி.

இந்த களிமண் அடையை கர்ப்பிணிப் பெண்கள் பாரம்பரியமாக சுண்ணாம்பு சத்துக்காக (Calcium) உண்டு வந்திருக்கிறார்கள். களிமண்ணில் நீர், மார்ஜரின், உப்பு கலந்து பிசைந்து தட்டில் வெய்யிலில் நன்றாகக் காய வைத்து தயாரிக்கப்படுகிறது. களிமண்ணில் இருக்கும் ஒட்டுண்ணியும் அபாயகரமான நச்சுக்கிருமிகளும் கருவில் இருக்கும் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை தருவதாக ஆய்வு கூறுகிறது. ஆனால், கருவிலிருந்து வெளியே எட்டிப்பார்த்த 5 வயது கூட எட்டாத, களிமண் அடையை மரண எதிர்ப்பு சக்தியாக உட்கொள்ளும் குழந்தைகளில் 5-ல் ஒருவர் வயிற்றுப்போக்கினால் ஹைட்டியில் இறந்துபோகிறார்களாம்.

மகாகவி பாரதியார் பிறந்திருக்கும் முன்பே, பிறந்திருக்கும் வறுமையின் தாண்டவத்திற்கு இன்னும் வழி பிறக்கவில்லை. இருப்பினும், மகாகவி பிறந்து வளர்ந்து வறுமையின் வலியை அன்று கவிதையாய் பிரசவத்திருப்பது இன்றைய காலகட்டத்திலும் பொருந்துகிற குமறல்; வேண்டுதல்.

மகாகவியின் கவிகளில் சில...

1. ‘பாரத ஜனங்களின் தற்கால நிலைமை’ என்ற கவிதையின் 6-வது பத்தி:

நெஞ்சு பொறுக்கு திலையே – இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்கு திலையே;
கஞ்சி குடிப்பதற் கிலார் – அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே – நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின் றாரே – இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே.


2. ‘பாரத சமுதாயம்’ என்ற கவிதையின் 2-வது பத்தி:

இனியொரு விதிசெய் வோம்-அதை
எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக்குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம் – வாழ்க!

வெள்ளி, 24 அக்டோபர், 2008

தீபாவளியை இப்படியும் அங்கீகரிக்கலாம்...

தீபாவளி நெருங்குகிறது; மக்கள் கூட்டமோ குட்டி இந்தியாக்களை நெருக்குகிறது. இந்த இந்து பண்டிகை மலேசிய வாழ் இந்துக்களுக்கு மட்டுமல்லாமல், வாழ்ந்த, வாழ்ந்துக்கொண்டிருக்கும், வாழ போகும் மொத்த மலேசிய இந்தியர்களுக்கு ஒரு அடையாளமாகவும் கருதப்படுகிறது. இத்தீப பெருநாள் பல நோக்கங்களைக் கொண்டு இந்துக்களால் கொண்டாடப்பட்டாலும், ஒன்றுக்கூடி மகிழ்ச்சிகளைப் பரிமாரிக்கொள்வதையும் ஒரு நோக்கமாக வைத்திருப்பதை மறுக்க முடியாது. பெரும்பாலோர் தீபாவளி முதல் நாள் முன்னோர்களை வழிப்படுவதையும் இந்த பெருநாளின் முக்கிய அங்கமாக தொன்றுத்தொட்டுக் கடைப்பிடிக்கின்றனர்.

‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்ற கூற்றுக்கேற்றார்போல் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் தீபாவளிக்கு முன் தீபாவளி விளம்பரங்கள் வந்து போய் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். முன்பு ஒளியேற்றியதுபோல் இக்காலகட்டத்தில் பெரும்பாலான முன்னனி நிறுவனங்கள் தீபாவளி விளம்பரங்களை தொலைக்காட்சியில் ஒளியேற்றுவதிலிருந்து விலகிக்கொண்டுள்ளனர். அதற்கு பல காரணங்களும் சொல்லப்படுகின்றன.

இன்றும் தீபாவளி பண்டிகையையொட்டி தீபாவளி விளம்பரங்களை ஒளியேற்றும் ஒரு சில பொறுப்புள்ள நிறுவனங்களின் செயல் பாராட்டுக்குரியது. இது மலேசிய திருநாட்டில் கொண்டாடப்படும் ஒர் இந்து பண்டிகைக்கு மட்டுமல்ல ஒவ்வொரு இந்து மதத்தவருக்கும் கிடைக்கும் ஒர் அங்கீகாரமாகவும் அமைகிறது.

நல்லெண்ணம் படைத்த இந்த நிறுவனங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்!

பெரும்பாலான பண்டிகை விளம்பரங்கள் கண்டிப்பாக நல்ல கருவை மையமாக தாங்கி மலரும். அப்படி மலர்ந்த இந்தாண்டு தீபாவளி விளம்பரங்களில் பெட்ரோனாஸ் (PETRONAS) நிறுவனத்தின் தீபாவளி விளம்பரமும் ஒன்று. அதை கீழ்கண்டு மகிழலாம்.

தீபாவளி வாழ்த்துக்கள்!


புதன், 22 அக்டோபர், 2008

வெற்றிப் பாதையில் சந்திரயான்-1

22/10/2008, புதன்கிழமை காலை 6.20 மணிக்கு ஆந்திர பிரதேசதிலுள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையதிலுருந்து, சந்திரயான்-1 (Chandrayaan-1) என்ற ஆளில்லா செயற்கைக்கோளை இந்தியா வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி உள்ளது.

1380 கிலோ கிராம் கொண்ட சந்திரயான்-1யை தாங்கியவாறு 44.4 மீட்டர் உயரமும் 316 டன் எடை கொண்ட பி.எஸ்.எல்.வி.சி-11 ராக்கேட் (Polar Satelite Launch Vehicle C11), ஏவப்பட்ட 18 நிமிடங்கள் 2 நொடிகளில் பூமியின் சரியான சுற்றுவட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது. 386 கோடி ரூபாய் பெருமானமுள்ள இந்த திட்டத்திற்கு தலைமை பொறுப்பை வகிப்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர் திரு. மயில் சாமி அண்ணாத்துரை.

சந்திரயான்-1 பூமியிலிருந்து 387,000 கிலோ மீட்டருக்கு அப்பால்; அதாவது நிலவை 100 கிலோ மீட்டருக்கு அப்பால் சுற்றி வந்து, தகவல்களை சேகரித்து பூமியில் உள்ள தரை நிலையத்துக்கு அத்தகவல்களை அனுப்பும். இந்த இலக்கு இன்னும் 15 நாட்களில் அடையப்படும். அதுமட்டுமல்ல, சந்திரயான்-1னிலிருந்து மூன் இம்பாக்ட் பிராப் (MIP - Moon Impact Probe) என்ற கருவியை நிலவின் தரைப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும். பிறகு, இந்திய நாட்டு தேசிய கொடியையும் நிலவின் தரைப்பகுதிக்கு இறக்கப்படும்.

வாழ்த்துக்கள் இந்தியா! இந்தியா போலெஹ் (India Boleh)!

மேல் விபரங்களுக்கு:
http://www.isro.gov.in/chandrayaan/htmls/home.htm
http://www.isro.gov.in/pslv-c11/brochure/index.htm






ஞாயிறு, 19 அக்டோபர், 2008

மலேசிய பண்பாட்டு மண்பாண்ட கண்காட்சி

18/10/2008, சனிக்கிழமை நானும் என் சித்தப்பா மகன் குமரனும், மலாயா பல்கலைக்கழக (University of Malaya) ஆசிய கலை தொல்பொருட்காட்சியகம் (Museum of Asian Art) ஏற்பாடு செய்திருந்த மலேசிய பண்பாட்டு மண்பாண்ட கண்காட்சிக்கு (Pameran Tembikar Tradisi Malaysia) சென்றிருந்தோம். அங்கு எங்களை தவிர வேறு இந்தியர்களை பார்க்க முடியவில்லை ஆனால் சில மலாய்காரர்கள் வந்திருந்திருனர். பெரும்பாலான இம்மாதிரியான சரித்திரமிக்க கண்காட்சிகளுக்கு என் இனத்தினர்; இந்தியர்களும் இந்துக்களும் கலந்துக்கொள்ளவதும்மில்லை பங்கேற்பதும்மில்லை. இது அவர்களின் அலட்சிய தன்மையா இல்லை அறியாமையா?

அலட்சிய தன்மைதான் காரணம் என்றால், அவர்களே அவர்களைத் திருத்திக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் அறியாமைதான் காரணமெனில், அவர்கள் மட்டுமே இதற்கு பொறுப்பல்ல, இந்நாட்டு இந்திய, தமிழ் ஊடகங்களும் பொறுப்பேற்க வேண்டும். கொலை, குத்து, கற்பழிப்பு மற்றும் சினிமா செய்திகளையே பெருமான்மையில் மையமாக கொண்டு உதிக்கும் ஊடகங்கள் ஏன் இம்மாதிரியான நிகழ்ச்சிகளை தங்கள் அகங்களில் அழுத்தமாக பிரசுரிப்பதில்லை. மலேசிய திருநாட்டில் நம் முன்னோர்கள் வாழ்ந்துக் கடைப்பிடித்த மரபுகளையும் வழிகளையும் வெளிக்கொனறும் இதுபோலான கண்காட்சி நிகழ்சிகள் பிர இன மக்களின் கடுமையான முயற்சிகளிளாலேயே ஏற்பாடு செய்திருந்தாலும், ஏன் நம் ஊடகங்கள் இராமருக்கு உதவிய அணில் போல் வந்துப்போகக் கூடாது? ஏன் இம்மாதிரியான செய்திகளை என் மக்களின் மனதிற்குக் கொண்டுச் சென்று ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது?

இக்கணம் உதித்த ஒரு மலாய் முது மொழியை நாம் சற்று சிந்தித்துப் பார்ப்போம்; ‘Biar Mati Anak, Jangan Mati Adat’. குழந்தையை இறக்க விட்டிருந்தாலும் கலாசாரத்தை இறக்க விடாதே, இதுவே இதன் கருத்து; என் கருத்துங்கூட.

கண்காட்சியில் பிடித்த சில படங்கள்...

வியாழன், 16 அக்டோபர், 2008

எண்ணெய்யும், என்னையும்.

இன்று (15/10/2008) அலுவலகத்துக்கு எப்பொழுதும் போல இல்லாமல் சிறிது சீக்கிரமாகவே வந்துவிட்டேன், காலை 8.45-க்கு. வந்ததும் என் இருக்கைக்குக்கூட போகாமல், நேராக விருந்தினர் வரவேற்பரைக்குச் (Visitor’s Waiting Room) சென்று ‘The Star’ நாளிதழைப் படிக்க எடுத்தேன். முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் பொறிக்கப்பட்ட தலையங்கத்தைச் சற்று உற்றுக் கூர்ந்தேன்; ‘DOWN’- வீழ்ச்சி. ஆம், நேற்று (14/10/2008) அறிவிக்கப்பட்டதுபோல், இன்று எண்ணெய் விலை ‘down’-ஆகியிருக்கிறது. அதாவது மலேசிய சந்தையில் எரிப்பொருளின் விலை குறைக்கப்பட்டிருக்கின்றது.

ரோன்97 எண்ணெய் (Petrol RON97) ஒரு லிட்டருக்கு 15 சென் குறைக்கப்பட்டு மலேசியா ரிங்கிட் 2.30 என்ற புதிய விலையிலும், ரோன்92 எண்ணெய் (Petrol RON92) ஒரு லிட்டருக்கு 10 சென் குறைக்கப்பட்டு மலேசியா ரிங்கிட் 2.20 என்ற புதிய விலையிலும், டீசல் ஒரு லிட்டருக்கு 20 சென் குறைக்கப்பட்டு மலேசியா ரிங்கிட் 2.20 என்ற புதிய விலையிலும் விற்கப்படுகிறது. ஒரு பீப்பாய் (Barrel) கச்சா எண்ணெய் யுஎஸ்$147-லிருந்து யுஸ்$83.73-க்கு இறங்கியிருப்பதே இந்த புதிய விலையின் மாற்றத்திற்கு காரணம் எனதி மலேசியன் இன்சாய்டர் டாட் காம்’ (themalaysianinsider.com) தெரிவித்தது.

5/6/2008-யில், ரோன்97 எண்ணெய் (Petrol RON97) ஒரு லிட்டருக்கு மலேசியா ரிங்கிட் 1.92-யிலிருந்து மலேசியா ரிங்கிட் 2.70-க்கு வெற்றிகரமாக அரசாங்கத்தால் 41 விழுகாடு விலை ஏற்றம் செய்யப்பட்டது. இந்த விலை ஏற்றம் நேரடியாக எல்லா பொருள்களின் விலைகளையும் ஏறுமுகமாக்கியது. இது பெரும்பாலான மலேசிய வாழ் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்தது; பாதித்துக்கொண்டிருக்கின்றது, என்னையும் உட்பட. இதற்குதாஜாபன்னும் வகையில் ஒவ்வொரு கார்களின் வேகத் திரன்களுக்கு ஏற்றால் போல் வருடாந்திர ரொக்க வெகுமதியும் ‘cash rebate’ வழங்கப்படுகிறது.

பிறகு இடைக்காலத்தில், படிப்படியாக ரோன்97 எண்ணெய் (Petrol RON97) ஒரு லிட்டருக்கு மலேசியா ரிங்கிட் 2.55-ஆகவும் 2.45-ஆகவும் குறைக்கப்பட்டது; இது ஒரு வரவேற்கப்பட வேண்டிய செயலாகும். என்னதான் எண்ணெய் விலை குறைக்கப்பட்டாலும் சிறிதளவும் அத்தியாவசிய பொருள்களின் விலை ஏற்றம் குறைந்த பாடில்லை; மனதின் பாரமும் குறைந்த பாடில்லை.

இன்று
, மீண்டும் மூன்றாவது முறையாக எண்ணெய் விலை குறைப்பை நாளிதழில் படித்தேன். மீண்டுமொரு வரவேற்கத்தக்க செயலாக இருந்தாலும் இதைப் படித்த எனக்கு எந்த ஒர் எண்ணமோ, உணர்ச்சிகளோ மனதை ஆட்கொள்ளவில்லை. அதேபோல்தான் என்னோடு வேலை செய்யும் சக நண்பர்களுக்கும் இருந்திருக்குமோ என்னமோ? காலையிலிருந்து (8.50 காலை) இந்நேரம் வரை (6.58 மாலை) முன்பு உணர்ச்சிகளை வெளிப்படுத்திய மாதிரி இப்பொழுது, யாரும் இம்முறை மன குமறல்களைத் துளியளவும் வெளிப்படுத்தவில்லை; ஒருவருக்கொருவர் தங்களை கருத்து பரிமாற்றங்களிலும் ஈடுபடுத்திக்கொள்ளவில்லை.

ஏன்? ஊணர்ச்சியற்று விட்டோமா? இல்லை, என்னதான் எண்ணெய் விலை இறங்கினாலும் ஏறிய வாழ்வியல் செலவு (living cost) இறங்கவா போகிறது என்ற எண்ணமா? அல்லது அலட்சியமா? புலப்படாத உணர்ச்சி என்னை சூழ்ந்துக்கொண்டிருக்கும் வேளையிலே எழுதுவதை நிறுத்துகிறேன்.

புதன், 15 அக்டோபர், 2008

கலையாரம்'08

11/10/2008, மாலை மணி 8.30, துன்கு சான்செலர் மண்டபம், மலாயா பல்கலைக்கழக இந்து சங்கம் படைக்கும் ஒரு நிகழ்ச்சி; புதிய முயற்சி. இந்நாள் மலாயா பல்கலைக்கழக இந்து சங்கத்தின் ஒர் பரிணாம வளர்ச்சியில் உதித்த படைப்புகளில் சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய ஒரு படைப்பு. கலையோடு சேர்ந்து சமயத்தை வளர்த்த நிகழ்வு என்று சொன்னால் மிகையாகாது.

அப்படி என்ன பெரிய சரித்திரம் வாய்ந்த படைப்பு இது?

ஆம், வருடந்தோறும் கலையாரம் என்ற பெயரில் கலைநிகழ்ச்சிகளையே படைத்து வந்த இந்த இந்து சங்கம், பெரும்பாலும் சினிமா பாடலுக்கு கூத்து கும்மாலம் அடித்ததிலிருந்து சற்று மாறுபட்டு இந்த முறை தமிழ் மேடை நாடகத்தை வெற்றியுடன் படைத்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க மலாயா பல்கலைகழகத்தின் இந்திய மாணவர்களின் பங்களிப்பு. வளரும் இளையோர்களின் இந்த புதிய முயற்ச்சி வளர்ந்த இளையோர்களுக்கு ஒர் எடுத்துக்காட்டு; படிப்பினையும் கூட.

மக்களால் ஏற்றுக்கொள்ளபடாமல்; ஒதுக்கப்பட்டு; காலத்தால் அழிந்துவரும் மேடைநாடகத்துக்கு ஒர் புத்துயிர் அளித்து இளைய சமுதாயத்தினர்களிடையே ஏற்றுக்கொள்ளும்படியாக ஆழமான அடிதலத்தை உறுதியாக அமைத்திருக்கிறார்கள். இப்புரட்ச்சிகரமானச் செயலுக்கு வருகை தந்திருந்த சுமார் 300 ஆதரவாளர்களின் எண்ணிக்கையே சான்றாக இருந்தாலும், அவர்கள் இறுதிவரை அமர்ந்து மனதார இரசித்ததே இவ்வெற்றியின் சான்று.

இது என்னடா இவன் தண்ணிப் போட்டு உலரான்னா? இல்ல நம்ம காதுல பூ சுத்தபாக்கரானா? மேடை நாடகத்துக்கா இவ்வளவு இரசிகர்கள் கூட்டம்? அதுவும் மலேசியாவுல்ல...?

இது உலரல் அல்ல! யாரையும் ஏமாற்றும் சதியும் அல்ல! நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மை தவிர வேறெதுவுமில்லை.

மக்களை கவர்ந்த, அவர்களின் மனதை ஈர்த்த இம்மேடை நாடகம், எஸ்.டி.பாலா அவர்களால் எழுதி இயக்கப்பட்டு, எட்டு மலாயா பல்கலைக்கழக மாணவர்களால் உயுரூட்டப்பட்ட காவியமே ‘கர்மா’. கர்மா இரு வருடங்களுக்கு முன்பு அஸ்ட்ரோ வானவில்லில் ஒர் தீபாவளியன்று ஒளிப்பரப்ப பட்டிருந்தாலும், நேரடியாக இன்று பார்த்து இரசித்ததில் தனி அனுபவத்துடன் கூடிய சுகம் கிடைத்தது.

‘கர்மா’ இன்றைய இந்திய சமூதாயச் சிந்தனைகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கதை. கரு ஆழமாக இருந்தாலும், அதை சாதாரனமாக மனதில் சேரும்படியாக இருந்த திரைக்கதையும் நகச்சுவை கலந்த யதார்தமான வசனங்களுமே கலையாரம்’08-ன் வெற்றியின் இரகசியம் என்று சொல்வதா? இல்லை, இக்கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் உயிரூட்டிய நடிகர்களின் அசாத்தியமான நடிப்பா, அல்ல அல்ல! அவர்கள் மேடையில் வாழ்ந்துக் காட்டிய வாழ்க்கையைச் சொல்வதா?

எது எப்படி இருப்பினும், பொதுவாக நாடகத்தை எண்ணுகையில் நல்ல அறுசுவை உணவு உண்டதுபோல், ம்ம்ம்ம்ம் இல்லை இல்லை கோவிலுக்கு சென்று வந்ததுபோல், ம்ம்ம்ம்ம் இல்லை இல்லை... இனம் புரியாத மன நிறைவும் மகிழ்ச்சியும் என்னைச் சூழ்ந்திருப்பதிருப்பதையே உணர்கின்றேன் என்று சொன்னால் அதுமிகையாகாது. என்னோமோ போங்க, என்னோமோ காதலுக்கு (இதுவும் எஸ்.டி.பாலாவின் படைப்புதான்) பிறகு நீண்ட இடைவெளியில் பார்க்கும் தமிழ் மேடைநாடகத்தின் காரணதினாலோ என்னமோ இருக்கலாம்.!?

கணவன் மனைவின் சண்டையில் ஆரம்பமாகிறது நாடகம். இன்றைய ஒரு சராசரி வீட்டின் குடும்ப தலைவன் தலைவியை சித்தரிக்கும் வகையில் அமைக்கபட்ட அவர்களின் உரையாடல் காட்சியில் ஆங்கிலமும் சேர்க்கப்பட்டிருந்தாலும், ஆங்கிலமே ஆட்சி செய்து தமிழை மூழ்கடித்ததை எனக்கு மட்டுமல்ல என்னைசுற்றி அவர்ந்தவர்களின் மனதையும் உருத்தியதை உணர்ந்தேன். தற்கால தோய்வாக் இருப்பின் இது வெகுநேரம் தொடரவில்லை; 20 நிமிடத்தில் மூன்றாவது காதாபாத்திரம் (குடும்ப தலைவனின் நண்பன்) நுழைந்ததும் நாடகம் 'சூடு’ பிடிக்க தொடங்குகிறது, மற்ற கதாபத்திரங்களும் (நல்ல ஆவிகள்) சேர்ந்ததும் நாடகம் சூடுப் பிடித்து ஆவி பறக்கிறது. ஆம், நாடக்கத்தில் சிறப்பே இந்த ஆவிகள் செய்யும் இரகளைகள்தான். அவர்கள் எழுப்பும் மன குமுறலில் சமூதாயச்சிந்தனைகள் வெளிப்படுகிறது.

ஏறக்குறைய இரண்டு மணிநேர மேடை நாடகம் முடிந்ததும் கரவோசையுடன் இருக்கையிலிருந்து எழுந்து வெளியேறுகையில் ஏதோ ஒரு மூலையில், இந்தநாடகத்துக்கும் இவருக்கும் எந்தவொரு சம்மந்தமுமில்லாமல் அப்பாவியாக நின்று கொண்டு கூட்டத்தில் காணாமல் போனதுபோல் முழித்துக்கொண்டிருந்த எஸ்.டி.பாலாவை அணுகி; கைக்குலுக்கி பாராட்டை தெரிவித்துக்கொண்டதுமட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து ஒரு ‘போட்டோ’வும் எடுத்துக்கொண்டேன்.

பிறகு, வீட்டிற்கு வந்து உறங்கும் முன் மடிக்கணினியை திறந்து அதில் என் மனதை திறந்தேன். மூன்று மணிநேரங்களுக்கு பிறகு கண்கள் சோர்வடைந்தன. மணியைப் பார்த்தால், அதிகாலை நான்கு. சரி, இப்போதைக்கு எழுதியது போதும் என்று, ரிங்கிட் மலேசியா 15-யில் ஒரு நல்ல தரமான மேடை நாடகத்தை பார்த்த திருப்தியில் உறங்கச் செல்கிறேன்.