புதன், 15 அக்டோபர், 2008

கலையாரம்'08

11/10/2008, மாலை மணி 8.30, துன்கு சான்செலர் மண்டபம், மலாயா பல்கலைக்கழக இந்து சங்கம் படைக்கும் ஒரு நிகழ்ச்சி; புதிய முயற்சி. இந்நாள் மலாயா பல்கலைக்கழக இந்து சங்கத்தின் ஒர் பரிணாம வளர்ச்சியில் உதித்த படைப்புகளில் சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய ஒரு படைப்பு. கலையோடு சேர்ந்து சமயத்தை வளர்த்த நிகழ்வு என்று சொன்னால் மிகையாகாது.

அப்படி என்ன பெரிய சரித்திரம் வாய்ந்த படைப்பு இது?

ஆம், வருடந்தோறும் கலையாரம் என்ற பெயரில் கலைநிகழ்ச்சிகளையே படைத்து வந்த இந்த இந்து சங்கம், பெரும்பாலும் சினிமா பாடலுக்கு கூத்து கும்மாலம் அடித்ததிலிருந்து சற்று மாறுபட்டு இந்த முறை தமிழ் மேடை நாடகத்தை வெற்றியுடன் படைத்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க மலாயா பல்கலைகழகத்தின் இந்திய மாணவர்களின் பங்களிப்பு. வளரும் இளையோர்களின் இந்த புதிய முயற்ச்சி வளர்ந்த இளையோர்களுக்கு ஒர் எடுத்துக்காட்டு; படிப்பினையும் கூட.

மக்களால் ஏற்றுக்கொள்ளபடாமல்; ஒதுக்கப்பட்டு; காலத்தால் அழிந்துவரும் மேடைநாடகத்துக்கு ஒர் புத்துயிர் அளித்து இளைய சமுதாயத்தினர்களிடையே ஏற்றுக்கொள்ளும்படியாக ஆழமான அடிதலத்தை உறுதியாக அமைத்திருக்கிறார்கள். இப்புரட்ச்சிகரமானச் செயலுக்கு வருகை தந்திருந்த சுமார் 300 ஆதரவாளர்களின் எண்ணிக்கையே சான்றாக இருந்தாலும், அவர்கள் இறுதிவரை அமர்ந்து மனதார இரசித்ததே இவ்வெற்றியின் சான்று.

இது என்னடா இவன் தண்ணிப் போட்டு உலரான்னா? இல்ல நம்ம காதுல பூ சுத்தபாக்கரானா? மேடை நாடகத்துக்கா இவ்வளவு இரசிகர்கள் கூட்டம்? அதுவும் மலேசியாவுல்ல...?

இது உலரல் அல்ல! யாரையும் ஏமாற்றும் சதியும் அல்ல! நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மை தவிர வேறெதுவுமில்லை.

மக்களை கவர்ந்த, அவர்களின் மனதை ஈர்த்த இம்மேடை நாடகம், எஸ்.டி.பாலா அவர்களால் எழுதி இயக்கப்பட்டு, எட்டு மலாயா பல்கலைக்கழக மாணவர்களால் உயுரூட்டப்பட்ட காவியமே ‘கர்மா’. கர்மா இரு வருடங்களுக்கு முன்பு அஸ்ட்ரோ வானவில்லில் ஒர் தீபாவளியன்று ஒளிப்பரப்ப பட்டிருந்தாலும், நேரடியாக இன்று பார்த்து இரசித்ததில் தனி அனுபவத்துடன் கூடிய சுகம் கிடைத்தது.

‘கர்மா’ இன்றைய இந்திய சமூதாயச் சிந்தனைகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கதை. கரு ஆழமாக இருந்தாலும், அதை சாதாரனமாக மனதில் சேரும்படியாக இருந்த திரைக்கதையும் நகச்சுவை கலந்த யதார்தமான வசனங்களுமே கலையாரம்’08-ன் வெற்றியின் இரகசியம் என்று சொல்வதா? இல்லை, இக்கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் உயிரூட்டிய நடிகர்களின் அசாத்தியமான நடிப்பா, அல்ல அல்ல! அவர்கள் மேடையில் வாழ்ந்துக் காட்டிய வாழ்க்கையைச் சொல்வதா?

எது எப்படி இருப்பினும், பொதுவாக நாடகத்தை எண்ணுகையில் நல்ல அறுசுவை உணவு உண்டதுபோல், ம்ம்ம்ம்ம் இல்லை இல்லை கோவிலுக்கு சென்று வந்ததுபோல், ம்ம்ம்ம்ம் இல்லை இல்லை... இனம் புரியாத மன நிறைவும் மகிழ்ச்சியும் என்னைச் சூழ்ந்திருப்பதிருப்பதையே உணர்கின்றேன் என்று சொன்னால் அதுமிகையாகாது. என்னோமோ போங்க, என்னோமோ காதலுக்கு (இதுவும் எஸ்.டி.பாலாவின் படைப்புதான்) பிறகு நீண்ட இடைவெளியில் பார்க்கும் தமிழ் மேடைநாடகத்தின் காரணதினாலோ என்னமோ இருக்கலாம்.!?

கணவன் மனைவின் சண்டையில் ஆரம்பமாகிறது நாடகம். இன்றைய ஒரு சராசரி வீட்டின் குடும்ப தலைவன் தலைவியை சித்தரிக்கும் வகையில் அமைக்கபட்ட அவர்களின் உரையாடல் காட்சியில் ஆங்கிலமும் சேர்க்கப்பட்டிருந்தாலும், ஆங்கிலமே ஆட்சி செய்து தமிழை மூழ்கடித்ததை எனக்கு மட்டுமல்ல என்னைசுற்றி அவர்ந்தவர்களின் மனதையும் உருத்தியதை உணர்ந்தேன். தற்கால தோய்வாக் இருப்பின் இது வெகுநேரம் தொடரவில்லை; 20 நிமிடத்தில் மூன்றாவது காதாபாத்திரம் (குடும்ப தலைவனின் நண்பன்) நுழைந்ததும் நாடகம் 'சூடு’ பிடிக்க தொடங்குகிறது, மற்ற கதாபத்திரங்களும் (நல்ல ஆவிகள்) சேர்ந்ததும் நாடகம் சூடுப் பிடித்து ஆவி பறக்கிறது. ஆம், நாடக்கத்தில் சிறப்பே இந்த ஆவிகள் செய்யும் இரகளைகள்தான். அவர்கள் எழுப்பும் மன குமுறலில் சமூதாயச்சிந்தனைகள் வெளிப்படுகிறது.

ஏறக்குறைய இரண்டு மணிநேர மேடை நாடகம் முடிந்ததும் கரவோசையுடன் இருக்கையிலிருந்து எழுந்து வெளியேறுகையில் ஏதோ ஒரு மூலையில், இந்தநாடகத்துக்கும் இவருக்கும் எந்தவொரு சம்மந்தமுமில்லாமல் அப்பாவியாக நின்று கொண்டு கூட்டத்தில் காணாமல் போனதுபோல் முழித்துக்கொண்டிருந்த எஸ்.டி.பாலாவை அணுகி; கைக்குலுக்கி பாராட்டை தெரிவித்துக்கொண்டதுமட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து ஒரு ‘போட்டோ’வும் எடுத்துக்கொண்டேன்.

பிறகு, வீட்டிற்கு வந்து உறங்கும் முன் மடிக்கணினியை திறந்து அதில் என் மனதை திறந்தேன். மூன்று மணிநேரங்களுக்கு பிறகு கண்கள் சோர்வடைந்தன. மணியைப் பார்த்தால், அதிகாலை நான்கு. சரி, இப்போதைக்கு எழுதியது போதும் என்று, ரிங்கிட் மலேசியா 15-யில் ஒரு நல்ல தரமான மேடை நாடகத்தை பார்த்த திருப்தியில் உறங்கச் செல்கிறேன்.

3 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்0மை தவிர வேறெதுவுமில்லை.//

hai... nice to see your blog. its intresting... sorry i have no tamil font now... out station... will back soon...

pls remove your word verification... its easy for others to comment your blog...

Sathis Kumar சொன்னது…

வணக்கம்,

தமிழ் வலைபூவுலகத்தில் காலடி எடுத்து வைத்துள்ள அன்பர் மு.வேலன் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

தொடர்ந்து இணையத்தில் தமிழ், தமிழியல், தமிழர் சார்ந்த கட்டுரைகளைப் படையுங்கள், படிப்பதற்குத் தயாராக உள்ளோம்.

தங்களை வலைப்பூங்காவில் இணைத்தாயிற்று. மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தில் இணைய தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

நன்றி.

மு.வேலன் சொன்னது…

நன்றி.

'Word Verification'-னை அகற்றிவிட்டேன்.