வியாழன், 18 நவம்பர், 2010

உயிர்சித்திரங்கள்

இன்று (18/11/2010) காலை மணி 1.30 ஆகியும் தூக்கம் வரவில்லை. விடிந்தால் வேலை என்ற வற்புறுத்தலில் தூங்கச் சென்றேன். தூங்க முயற்சித்தேன்... கண்களை மூடினால் மீனாட்சி, பொன்னம்மாள் மற்றும் வீரா ஆகியோர் கூட்டணி அமைத்து என் தூக்கத்தை கலைத்துக் கொண்டிருந்தார்கள். பிறகு எங்கே தூங்குவது, இருந்தும் என் முயற்சியைத் தொடர்ந்தேன்.

பொழுது விடிந்தது, அதே மூவர்களால் எழுப்பப்பட்டேன். எழுந்தேன்; காலை கடன்களை முடித்தேன்; அலுவலகம் சேர்ந்தேன். இப்பொழுது மதியம் மணி 1. அவர்கள் இன்னும் என்னை துரத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள்... யார் இவர்கள்? ஏன்?

மீனாட்சியும் பொன்னம்மாளும் ஒலி, ஒளியில் காட்சியமைக்கப்படாத இரு சித்திரங்கள். இவர்கள் இருவருமே JK-வின் (ஜெயகாந்தன்) எழுத்துகளினால் செதுக்கப்பட்ட ‘தர்க்கம்’ சிறுகதையை உயிரூட்டும் பெரும்பாத்திரங்கள். இந்த கதையை நேற்றைய (17/11/2010) காலை பசியாற்றுதலுக்குப் பிறகு வாசிக்க நேர்ந்தது.

சில சமயங்களில் கதைகளை வாசிக்கும் பொழுது மனதில் அதை காட்சி படுத்திக்கொள்வது புரிதலுக்கு வசதியாக இருக்கும். அப்படிதான் தர்க்கமும் காட்சியமைக்கப்பட்டது. மீனாட்சியும் பொன்னம்மாளும் செய்துகொள்ளும் தர்கத்தின் எதிர்வினைதான் கதையின் முடிவு. அதை மனதில் முழுவதுமாய் காட்சிப்படுத்த கடினமாகத்தான் இருந்தது எனினும் அக்காட்சி ஒரு வகையில் சிறப்பாகவே அமைந்தது, “ரகுபதி ராகவ ராஜாராம்... பதிதபாவன சீதாராம்...” பாடல் பின்னணியில் ஒலித்துக் கொண்டு மேலும் வலுச்சேர்த்தது.

சில நிமிடங்களுக்குள் தர்க்கம் வாசித்து முடித்தாயிற்று. அடுத்தபடியாக JK-வின் ‘துறவு’-க்குள் புகுந்தேன். துறவை தொடர முடியவில்லை. தர்க்கமே என்னை முழுமையாய் ஆட்கொண்டிருந்தது. அதன் தாக்கத்திருலிருந்து விடுப்பட முடியவில்லை. பல முறை முயற்சித்தும் இரண்டு பக்கங்களைக்கூட கடக்கவில்லை. முடிவில் துறவை துறந்தேன்.

அன்று முழுவதும் வேறு எதையும் கூட படிக்க முடியவில்லை...

நேரம் பிற்பகல் மணி 3, அஸ்ட்ரோ த
ங்கத்திரையில் ராவணன் படம் ஒளியேறியது. வீரா மணிரத்தினத்தின் ராவணன். படத்தின் இறுதிக் கட்டத்தில் அவன் இறக்கும் காட்சி மட்டும் என்னை நெகிழ வைத்தது. அதற்கு மூல காரணம் பின்னனியில் ஒலிக்கும் ரஹ்மானின் பின்னணி பாடல்.


பாடலுடன் கூடிய ராவணனின் இறுதிக்காட்சி மட்டும் காரணமின்றி என் மனதை மீண்டும் மீண்டும் வருடிச் செல்கிறது. சுமார் 5.10-க்கு படம் முடிவுற்றது. ஆனால், அதன் தாக்கம் மட்டும் என்னை பின்தொடர்கின்றது.



இதே போன்ற மன நிலையை பல முறைகள் எதிர்கொண்டிருந்தாலும் குறிப்பாக இரு வாரங்களுக்கு முன் நாஞ்சில் நாடனின் 'இடலாக்குடி ராசா' என்னை பெருமளவு பாதித்திருந்தது. இந்த ஒருவனின் மனதாக்கத்திலிருந்து முழுமையாக விடுப்படுவதற்குள் மீனாட்சி, பொன்னம்மாள் மற்றும் வீராவின் கூட்டணியா...!?

ஏனோ இந்த கதாபத்திரங்கள் அனைத்தும் கதை பலத்துக்காக புனையப்பட்டிருந்தாலும் வாசிப்பவர்ளின் மனதில் அவர்களுக்குத் தெரியாமலேயே அழுத்தமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இவ்வகையான புனைவுகள் பலரது தூக்கத்தையும் அமைதியையும் குலைத்திருந்தாலும் முடிவில் மன தெளிவையே ஏற்படுத்துகின்றன.

இந்த உலகத்தில் பல மூலை முடுக்குகளில் இந்த காதாபத்திரங்கள் அனைத்தும் சிதறி உயிர்சித்திரங்களாக வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன இன்று மனிதர்களாக.