14 வருடங்களுக்குப் பிறகு, நேற்று (29/12/2010), நம் மலேசிய அணி ஆசியன் காற்பந்து சம்மேளனம் சுசுக்கி கிண்ணம் 2010 [Asean Football Federation (AFF) Suzuki Cup 2010] இரண்டாம் கட்ட இறுதி சுற்றில் 4-2 புள்ளியில் இந்தோநேசிய அணியை இந்தோநேசியாவில் கெலோரா புங் கர்ணோ அரங்கத்தில் (Gelora Bung Karno Stadium, Indonesia) வீழ்த்தியது.
கடந்த 26/12/2010, முதல் கட்ட இறுதி சுற்றில் மலேசிய அணி 3-0 ‘கோல்’ (Gol) என இந்தோநேசிய அணியை மலேசியாவில் புகிட் ஜாலில் தேசிய அரங்கத்தில் தோற்கடித்தது.
இதற்கு முன், தொடர்ந்து 7 முறையில் மலேசியா ஒரே ஒரு முறை மட்டுமே 1996-ல் இறுதி சுற்றுக்கு தேர்வானது. அப்பொழுது இந்த கிண்ணத்தை டைகர் கிண்ணம் (Tiger Cup) என்பர். இருப்பினும், இந்த இறுதியாட்டம் மலேசியாவிற்கு சாதகமாக அமையவில்லை. 0-1 ‘கோல்’ என தாய்லாந்திடம் (Thailand) தோல்வியுற்றது. அப்போதிலிருந்து, தென்கிழக்காசியாவின் காற்பந்தாட்ட மன்னனாக வரவேண்டும் என மலேசியாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறாமலே இருந்து வந்திருந்தது.
இந்த கனவை நிறைவேற்றிய கி. ராஜகோபால் அவர்களின் பயிற்சியிலும் வழிகாட்டுதலிலும் தங்கள் திறனை மெருகேற்றிக் கொண்ட மலேசிய அணியின் சாதனைக்கு வாழ்த்துகள்!
இந்த வெற்றியை கொண்டாடுவதற்கு நம் பிரதமர் நஜிப் அவர்கள் நாளை 31/12/2010 பொது விடுமுறையாக அறிவித்திருக்கிறார்.
நேற்று (1/12/2010) தாமான் புடாயாவில் நடைபெற்ற எஸ். டி. பாலாவின் “2012” தமிழ் மேடை நாடகத்திற்கு என் நண்பருடன் சென்றிருந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இரசித்த நிகழ்ச்சி இது.
இருபது ரிங்கிட் நுழைவு சீட்டில் உள்ளே புகுந்து அமர்ந்தோம். நேற்று முதல் காட்சிக்கு எங்களையும் சேர்த்து சுமார் 35 இரசிகர்கள் இருந்திருப்பார்கள். சரியாக 8.31-க்கு நாடகம் தொடங்கி 10.30-க்கு முடிவுற்றது.
இதுவரை எஸ். டி. பாலாவின் நாடகங்களில் அவர் திரைக்கு பின்னால் செயலாற்றிதான் நான் பார்த்திருக்கின்றேன். ஆனால், நேற்றுதான் நான் அவரை முதல் முதலாக திரைக்கு முன்; மேடையில் பார்க்க முடிந்தது. ஆம், அவர்தான் அறிவழகன்.
இந்த நூற்றாண்டில் நடக்கும் சமூதாய ஒழுக்கியல் மீறல்களை சகித்துக் கொள்ள முடியாத அறிவழகன் அவைகளை அனுசரித்துக்கொள்ளவும் தயாராக இல்லை. இந்த மன அழுத்தத்தில் தள்ளப்பட்டு அவன் அபாரமாக எதிர்வினையாற்றுகிறான்; அதன் பின் விளைவுகளையும் எதிர்க்கொள்கிறான்.
அப்படி என்ன மன உளைச்சல் அறிவழகனுக்கு? அவன் செய்தது சரியா? இந்த கேள்விகளுக்கு விடை நாகர்த்தும் உச்சமே “2012”.
இந்த நாடகத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் திறம்பட கையாளப்பட்டிருக்கின்றன. அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துகள்!
எஸ். டி. பாலாவின் திறைமையான படைப்புகளில் இதுவும் ஒன்றாக நான் கருதுகிறேன்.
இன்று (18/11/2010) காலை மணி 1.30 ஆகியும் தூக்கம் வரவில்லை. விடிந்தால் வேலை என்ற வற்புறுத்தலில் தூங்கச் சென்றேன். தூங்க முயற்சித்தேன்... கண்களை மூடினால் மீனாட்சி, பொன்னம்மாள் மற்றும் வீரா ஆகியோர் கூட்டணி அமைத்து என் தூக்கத்தை கலைத்துக் கொண்டிருந்தார்கள். பிறகு எங்கே தூங்குவது, இருந்தும் என் முயற்சியைத் தொடர்ந்தேன்.
பொழுது விடிந்தது, அதே மூவர்களால் எழுப்பப்பட்டேன். எழுந்தேன்; காலை கடன்களை முடித்தேன்; அலுவலகம் சேர்ந்தேன். இப்பொழுது மதியம் மணி 1. அவர்கள் இன்னும் என்னை துரத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள்... யார் இவர்கள்? ஏன்?
மீனாட்சியும் பொன்னம்மாளும் ஒலி, ஒளியில் காட்சியமைக்கப்படாத இரு சித்திரங்கள். இவர்கள் இருவருமே JK-வின் (ஜெயகாந்தன்) எழுத்துகளினால் செதுக்கப்பட்ட ‘தர்க்கம்’ சிறுகதையை உயிரூட்டும் பெரும்பாத்திரங்கள். இந்த கதையை நேற்றைய (17/11/2010) காலை பசியாற்றுதலுக்குப் பிறகு வாசிக்க நேர்ந்தது.
சில சமயங்களில் கதைகளை வாசிக்கும் பொழுது மனதில் அதை காட்சி படுத்திக்கொள்வது புரிதலுக்கு வசதியாக இருக்கும். அப்படிதான் தர்க்கமும் காட்சியமைக்கப்பட்டது. மீனாட்சியும் பொன்னம்மாளும் செய்துகொள்ளும் தர்கத்தின் எதிர்வினைதான் கதையின் முடிவு. அதை மனதில் முழுவதுமாய் காட்சிப்படுத்த கடினமாகத்தான் இருந்தது எனினும் அக்காட்சி ஒரு வகையில் சிறப்பாகவே அமைந்தது, “ரகுபதி ராகவ ராஜாராம்... பதிதபாவன சீதாராம்...” பாடல் பின்னணியில் ஒலித்துக் கொண்டு மேலும் வலுச்சேர்த்தது.
சில நிமிடங்களுக்குள் தர்க்கம் வாசித்து முடித்தாயிற்று. அடுத்தபடியாக JK-வின் ‘துறவு’-க்குள் புகுந்தேன். துறவை தொடர முடியவில்லை. தர்க்கமே என்னை முழுமையாய் ஆட்கொண்டிருந்தது. அதன் தாக்கத்திருலிருந்து விடுப்பட முடியவில்லை. பல முறை முயற்சித்தும் இரண்டு பக்கங்களைக்கூட கடக்கவில்லை. முடிவில் துறவை துறந்தேன்.
அன்று முழுவதும் வேறு எதையும் கூட படிக்க முடியவில்லை...
நேரம் பிற்பகல் மணி 3, அஸ்ட்ரோ தங்கத்திரையில் ராவணன் படம் ஒளியேறியது. வீரா மணிரத்தினத்தின் ராவணன். படத்தின் இறுதிக் கட்டத்தில் அவன் இறக்கும் காட்சி மட்டும் என்னை நெகிழ வைத்தது. அதற்கு மூல காரணம் பின்னனியில் ஒலிக்கும் ரஹ்மானின் பின்னணி பாடல்.
பாடலுடன் கூடிய ராவணனின் இறுதிக்காட்சி மட்டும் காரணமின்றி என் மனதை மீண்டும் மீண்டும் வருடிச் செல்கிறது. சுமார் 5.10-க்கு படம் முடிவுற்றது. ஆனால், அதன் தாக்கம் மட்டும் என்னை பின்தொடர்கின்றது.
இதே போன்ற மன நிலையை பல முறைகள் எதிர்கொண்டிருந்தாலும் குறிப்பாக இரு வாரங்களுக்கு முன் நாஞ்சில் நாடனின் 'இடலாக்குடி ராசா' என்னை பெருமளவு பாதித்திருந்தது. இந்த ஒருவனின் மனதாக்கத்திலிருந்து முழுமையாக விடுப்படுவதற்குள் மீனாட்சி, பொன்னம்மாள் மற்றும் வீராவின் கூட்டணியா...!?
ஏனோ இந்த கதாபத்திரங்கள் அனைத்தும் கதை பலத்துக்காக புனையப்பட்டிருந்தாலும் வாசிப்பவர்ளின் மனதில் அவர்களுக்குத் தெரியாமலேயே அழுத்தமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இவ்வகையான புனைவுகள் பலரது தூக்கத்தையும் அமைதியையும் குலைத்திருந்தாலும் முடிவில் மன தெளிவையே ஏற்படுத்துகின்றன.
இந்த உலகத்தில் பல மூலை முடுக்குகளில் இந்த காதாபத்திரங்கள் அனைத்தும் சிதறி உயிர்சித்திரங்களாக வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன இன்று மனிதர்களாக.
19-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, டெல்லி 2010 (DELHI 2010), 3/10/2010-ஆம் நாள் பிரமாண்டமாக புதுடெல்லியில் தொடங்கி அதே பிரமாண்டத்துடனும் கோலாகலமான கலை நிகழ்ச்சியுடனும் நேற்று (14/10/2010) நிறைவு பெற்றது.
பதக்க பட்டியலில் இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களை பெற்று, 2-வது இடத்தை பிடித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
பல இன்னல்களை கடந்து, பன்னிரெண்டு நாட்கள் உற்சவத்தை வெற்றிகரமாக RM1853 கோடி (US$6 billion) விளையாட்டு போட்டியை இந்தியா நடத்தி சரித்திரம் படைத்தது.